காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், 22.01.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாலையில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
நடப்பாண்டில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள - இப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் “கலந்துரையாடல்” நிகழ்ச்சியாக இக்கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
பள்ளி தாளாளரும், பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளருமான டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா முன்னிலை வகித்தார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வையொட்டி மாணவர் - பெற்றோருக்கான ஆலோசனைகளை உள்ளடக்கி பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் சிற்றுரையாற்றினார்.
பின்னர், பெற்றோர் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
*** படிப்பில் ஆர்வமின்றி செயல்படும் மாணவர்களுக்கு பள்ளி வழங்கும் ஆலோசனை...
*** வீட்டில் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகள்...
*** தேர்ச்சியிழக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிடவும், தேர்ச்சி பெறும் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிடவும் தேவைப்படும் ஆலோசனைகள்...
*** அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு - மாணவர்களின் நலனுக்காக பள்ளி சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள்...
உள்ளிட்டவை குறித்த கேள்விகளை பெற்றோர் கேட்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - பெற்றோரின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றினார்.
மாணவர்களின் நலனுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள – மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பள்ளி தலைமையாசிரியராக தான் மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள், மாணவர் - பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
நடப்பாண்டுடன் தான் ஓய்வு பெறவுள்ளதாகக் கூறிய தலைமையாசிரியர், தனது பணிக்காலத்தின் இந்த கடைசியாண்டில், பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நூறு சதவிகித தேர்ச்சி பெறச் செய்வதும், சாதனைகள் புரியச் செய்வதுமே தனது இலட்சியம் என்று அவர் கூறுகையில், அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அனைவரும் கரவொலியெழுப்பினர்.
தலைமையாசிரியர் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், பள்ளியின் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் தந்தையரை விட அன்னையர் அதிகளவில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன் |