இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரபீஉல் அவ்வல் மாதம் முதல் 12 தினங்களில், காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்கள் பலவற்றிலும், பெண்கள் தைக்காக்களிலும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், இவ்வாண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டைக் குளத்துப் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, ஹாஃபிழ் அமீர் பள்ளி, ஆறாம்பள்ளி, புதுப்பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும், ஜாவியா மற்றும் குத்பிய்யா மன்ஸிலிலும், பெண்கள் தைக்காக்களிலும் இம்மாதம் 14ஆம் தேதியன்று துவங்கி, 25ஆம் தேதி வரை தினமும் இரவு மஃரிப் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வுகளில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொள்கின்றனர்.
குருவித்துறைப் பள்ளியிலும், ஜாவியாவிலும் தினமும் மவ்லித் மஜ்லிஸ் நிறைவுற்ற பின்னர் மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது. ஜாவியாவில், ரபீஉல் அவ்வல் மாதம் 12 நாட்களில் மவ்லித் ஓதுவதற்கான செலவுகளுக்கென்றே தனியாக வக்ஃப் சொத்து உள்ளதும், அச்சொத்திலிருந்தே அதற்கான செலவுகள் நிறைவேற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 14:34 / 23.01.2013] |