தமிழகத்தில் பல்வேறு நிலையில் உள்ள 130 சாலைகளை மேம்படுத்துவது, வலுப்படுத்துவது மற்றும் மிகவும் பழுதடைந்துள்ள சாலைகளை மறுபடியும் சீராக அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக 211 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன. கிராமங்களை இணைப்பது, பயண நேரம் குறைப்பு, வாகன இயக்கச் செலவினை மிச்சப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ஊரகச் சாலைகளை பிரதான சாலைகளுடன் இணைத்து ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பினை ஏற்படுத்தி நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், 3,793 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் மற்றும் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதற்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு சாலை மற்றும் மேம்பாலப் பணிகளுக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 340 கோடியே 68 லட்சம் ரூபாய் ஏற்கெனவே அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
புதிய சாலைகள் அமைக்கின்ற பணி மேற்கொள்ளும்போது அல்லது ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்த திட்டமிடும்போது, அந்த சாலையை சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும் வகையில், சாலை கட்டமைப்பு வளையம் அல்லது Road Grid அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக சென்னை தேசிய நெடுஞ்சாலை 45-ல் வண்டலூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 205ல் நெமிலிச்சேரி வரை முதற்கட்டமாகவும், நெமிலிச்சேரியிலிருந்து திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் மீஞ்சூரை இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட உள்ள சுமார் 62 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சாலை அமையும் பகுதியில் செயல்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இத்திட்டத்திற்காக நில எடுப்பு பணி உட்பட, சாலை வடிவமைப்பு, சாலை நேர்பாடு, நிலவியல் வடிவமைப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியினை மேற்கொள்வதற்காக 5 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பல்வேறு நிலையில் உள்ள 130 சாலைகளை மேம்படுத்துவது, வலுப்படுத்துவது மற்றும் மிகவும் பழுதடைந்துள்ள சாலைகளை மறுபடியும் சீராக அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக 211 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
விரைவான போக்குவரத்தினை உறுதி செய்யும் வகையில், ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இருப்புப் பாதைகளை கடக்க சாலை மேம்பாலங்கள் அமைக்கும் திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது சிவடி-தர்மபுரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை 7-ல் 144-வது கிலோமீட்டரில் ஒரு சாலை மேம்பாலம், வெண்ணம்பட்டியில் ஒரு சாலை மேம்பாலம், தர்மபுரி- பாலக்கோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒகேனக்கல்-பென்னாகரம்-தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு மேம்பாலம், தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் ஒரு சாலை மேம்பாலம் என 4 சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்கள். இப்பணிகள் தொடர்பான நில எடுப்பு உட்பட இதர பணிகள் மேற்கொள்ள 30 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு அளித்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
சாலைகள் மட்டும் அமைத்தால் போதுமானதல்ல. அதைவிட முக்கியமானது அதனை பராமரித்தல் ஆகும். எனவே சாலைகளை நல்ல முறையில் பராமரிக்க, தற்பொழுதுள்ள பராமரிப்பு முறையை மாற்றி நீண்ட கால செயல்பாட்டு அடிப்படை பராமரிப்பு ஒப்பந்தம் (Performance Based Maintenance Contract) முறையில், ஒரே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சாலை தொகுப்பினை தொடர்ந்து 5 ஆண்டுகள் பராமரிக்க வழிவகை செய்யும் திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, சுழற்சி முறையில் சாலைகளை பழுதுபார்த்தல், புதுப்பித்தல், சாலைகளை வலுப்படுத்துதல், சாலைகளை மேம்படுத்துதல், தேவைப்படும் இடங்களில் சாலைகளை மறுநிர்மாணம் செய்தல் போன்ற பணிகள் இந்த புதிய பராமரிப்புத் திட்டத்தின் கீடிந 5 ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், முதற்கட்டமாக கோயம்புத்தூர் வட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில் 121.62 கோடி ரூபாய் செலவில் 191.400 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகளும், 112.31 கோடி ரூபாய் செலவில் 185.988 கி.மீ நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகளும் முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டு செயல்பாட்டு அடிப்படை பராமரிப்பு ஒப்பந்த முறையில் செயல்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம் சாலைகளின் தரம் தொடர்ந்து உறுதி செய்யப்படும்.
நெடுஞ்சாலைத் துறையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மூலம், தமிழகத்திலுள்ள சாலைப் போக்குவரத்து மேன்மை அடைவதுடன், நகர்ப் பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல்கள் தவிர்க்கப்பட்டு, பயணிகள் எந்தவிதமான சிரமமுமின்றி தாங்கள் விரும்பிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சென்றடைய வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|