நாடகங்களின் கதைகளை காவல்துறையிடம் சமர்ப்பித்து முன் அனுமதி பெறவேண்டும் என்ற சட்ட விதிகள் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தீர்ப்பு வழங்கியுள்ளார். பிரபல பத்திரிக்கையாளரான ஞானி என்ற என்.வி.சங்கரன் - பரீக்ஷா என்ற நாடக குழுவினை நடத்தி வருகிறார். அவர் தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பினை நீதிபதி புதனன்று (ஜனவரி 23) வழங்கினார்.
மராத்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதிய கமலா என்ற நாடகத்தினை மொழிப்பெயர்த்து, அரங்கேற்றிட ஞானி திட்டிமிட்டிருந்தார். Tamil Nadu Dramatic Performances Act, 1954 என்ற சட்டத்தின் விதிமுறைகள்படி நாடகத்தின் கதையை - சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒப்புதலுக்காக அரங்கேற்ற தேதிக்கு மூன்று வாரங்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தார். நாடகம் அரங்கேற்றம் நடைபெற வேண்டிய நாளில் - காவல்துறை ஆணையர், பல மாற்றங்களை கதையில் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். வேறு வழியின்றி காவல்துறை ஆணையரின் உத்தரவினை ஏற்றுக்கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகமும் அரங்கேறியது. இச்சம்பவத்தை தொடர்ந்தே உயர்நீதிமன்றத்தில் ஞானி இந்த வழக்கினை தொடர்ந்தார்.
Tamil Nadu Dramatic Performances Act, 1954 சட்டம் ஆங்கிலேய காலத்து மிச்சம் என வாதிட்ட ஞானி , ஒரு நாடகத்தை ஆய்வு செய்ய காவல்துறை ஆணையர் என்பவர் ஒரு கலைஞனும் அல்ல கலை உணர்ச்சியுடைய நபரும் அல்ல என தெரிவித்தார்.
அரசு தரப்பில் வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ. நவநீத கிருஷ்ணன் - காவல்துறையின் முடிவு குறித்து ஆட்சேபனை இருப்பின் அதனை தெரிவிக்க சட்டத்தில் வழி இருக்கும்போது, இதனை சட்டத்திற்கு புறம்பானது என கூற முடியாது என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்துரு, Tamil Nadu Dramatic Performances Act, 1954 சட்டத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் (Objectional Performance) என்ற சொல் தெளிவற்றது (Vague) என்றும், இது இந்திய அரசியல் சாசனம் - கருத்து சுதந்திரத்தை வரைமுறைப்படுத்த விதித்துள்ள சட்டப்பிரிவு 19(2) படியான அனுமதிக்கத்தக்க கட்டுப்பாடு (Reasonable Restriction) ஆகாது என்றும் கூறி - அந்த சட்டத்தில் உள்ள முன் அனுமதி பெறவேண்டும் என்பது குறித்த பல விதிமுறைகள் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கினார்.
ஞானி தரப்பில் வழக்கறிஞர் யசோத் வரதன் ஆஜரானார். |