அண்மையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் படி, வாக்காளர் அடையாள அட்டை இம்மாதம் 22ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில், 01.01.2013 தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க - திருத்தம் செய்ய - நீக்க - அதே தொகுதியில் முகவரி மாற்ற 01.10.2012 முதல் 20.11.2012 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மேற்படி விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விசாரணை செய்யப்பட்டு, மேற்படி விசாரணையின் அடிப்படையில் 10.01.2013 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
விண்ணப்பம் கொடுத்தவர்களில் தகுதியான நபர்களுக்கு, அவர்களது பெயர் எந்த பாகத்தில் எந்த வரிசை எண்ணில் இடம்பெற்றுள்ளது என்பதற்கும், தகுதியற்ற விண்ணப்பங்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தபால் அலுவலகத்தின் மூலம் இ-போஸ்ட் அனுப்பப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த 19 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு 22.01.2013 முதல், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்படும்.
தற்பொழுது புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 18 வயது நிரம்பியவர்களுக்கு, 25.01.2013 அன்று, வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்படும் வாக்காளர் தின விழா - 2013இல் வைத்து, விழா மேடையில் வழங்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |