உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் அ.முஜீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் வட்டார கிளை நூலகங்கள் சார்பில், இம்மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று, “என்னை செதுக்கிய நூல்கள்” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது.
பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தல், எழுதும் ஆற்றலை ஊக்கப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக நடத்தப்படும் இப்போட்டி, காயல்பட்டினம் கிளை நூலகத்திலும், 18.04.2013 வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மாவட்ட நூலக அலுவலரால் முறைப்படி அமைக்கப்படும் 3 நபர்கள் அடங்கிய நடுவர் குழுவால், வட்ட அளவில் சிறந்த முதல் மூன்று படைப்புகள் தெரிவு செய்யப்படும்.
வெற்றி பெறுபவர்களுக்கு
முதற்பரிசு ரூ.1,000
இரண்டாம் பரிசு ரூ 500
மூன்றாம் பரிசு ரூ.350
என்ற அடிப்படையில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பள்ளி மாணவ-மாணவியர், நூலக வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 16.04.2013 செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணிக்குள், தமது பெயர்களை காயல்பட்டினம் கிளை நூலகத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு, காயல்பட்டினம் கிளை நூலக நூலகர் அ.முஜீப் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |