காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னை மண்ணடியில் நடைபெற்ற “சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013” நிகழ்ச்சியில், காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூர் காயல்பட்டினத்து மக்களை ஒருங்கிணைத்து, நகர்நலப் பணிகளாற்றிடும் நோக்குடன் நமது காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) துவக்கப்பட்டு, இறையருளால் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
புதிய நிர்வாகம்:
இதுவரை துறைவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு - அதனடிப்படையில் செயல்பட்டு வந்த நமது அமைப்பிற்கு, அண்மையில் நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும், அதனைத் தொடர்ந்து, தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013:
KCGC அமைப்பை இன்னும் வலுப்படுத்தும் பொருட்டு, அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் “சென்னைவாழ் காயலர் சங்கமம் - 2013” ஆகிய நிகழ்ச்சிகள், இறையருளால் இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை, சென்னை மண்ணடியிலுள்ள மியாஸி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
வரவேற்பு:
நிகழ்விடம் வருகை தந்த காயலர்கள் அனைவருக்கும் - அவர்களது வெயில் வேட்கையைத் தணிக்கும் முகமாக, நிகழ்விட நுழைவாயிலில் மோர் பருகக் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
பெயர் பதிவு:
அதுபோல, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காயலர்கள் மற்றும் KCGC அமைப்பில் உறுப்பினராக விரும்புவோர் பெயர் பதிவும் நிகழ்விட நுழைவாயிலில் நடைபெற்றது.
நிகழ்முறை:
KCGC தலைவர் ஆடிட்டர் ரிஃபாய் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். உறுப்பினர் எஃப்.அஹ்மத் முஹ்யித்தீன் - இறைமறை திருக்குர்ஆனின் வசனங்களை தமிழாக்கத்துடன் ஓதி, நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். KCGC பொருளாளர் குளம் முஹம்மத் தம்பி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அமைப்பின் துணைத்தலைவர் ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
KCGC கடந்து வந்த பாதை:
அடுத்து, “KCGC அமைப்பு கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில், அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் உரையாற்றினார்.
கடந்த இரண்டாண்டுகளில் KCGC நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் குறித்து விரிவாக பட்டியலிட்டார். அத்துடன், அமைப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளையும் அவர் அனைவருக்கும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
தலைமையுரை:
அவரைத் தொடர்ந்து, அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய் தலைமையுரையாற்றினார்.
KCGC அமைப்பு, சென்னைவாழ் காயலர்கள் அனைவருக்குமானது என்றும், எனவே, சென்னையில் வசிக்கும் காயலர்கள் அனைவரும் இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ள முன்வர வேண்டுமென்றும், தேவையான அனுபவங்களைப் பெற்றவர்களாக - அமைப்பின் நிர்வாகப் பொறுப்புகளையும் அலங்கரிக்க சென்னைவாழ் காயலர்கள் ஆயத்தமாக வேண்டும் என்றும் அவர் தனதுரையில் - அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அத்துடன், KCGC அமைப்பின் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். உரையில் சில:
>> ஆண்டுக்கு இருமுறை KCGC உறுப்பினர்களுடன் சிற்றுலா மற்றும் ஒன்றுகூடல்
>> இரு பெருநாட்களுக்குப் பிறகும் ஈத்மிலன் (பெருநாள் ஒன்றுகூடல்) நிகழ்ச்சிகள்
>> ஆண்டுக்கு ஒருமுறை ‘உணர்வாய் உன்னை” மார்க்க நிகழ்ச்சி
>> மருத்துவத்தில் ‘ஷிஃபா’வுடன் இணைந்து செயலாற்றுதல்
>> வெளிநாட்டு காயல் நலமன்றங்கள் கோரும் வேலைவாய்ப்புகளுக்கான நேர்காணல் செய்து தகுதியான ஆட்களை அடையாளப்படுத்தல்
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தென்னக ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி முஸத்திக் அவர்கள் குறித்து நிகழ்ச்சியில் அறிமுகவுரை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
அரசு வேலைவாய்ப்புகள், அரசால் வழங்கப்படும் சலுகைகளை முஸ்லிம்கள் பெற்றிட வேண்டியதன் அவசியம், அதற்குத் தேவையான கல்விப் பிரிவுகளில் முஸ்லிம் மாணவர்களைப் பயிலச் செய்தல், அதுகுறித்த விழிப்புணர்வை மாணவ சமுதாயத்திற்கு வழங்கல் உள்ளிட்டவை குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
சிற்றுண்டியுபசரிப்பு:
அதனைத் தொடர்ந்து, சிறிது நேரம் இடைவேளை விடப்பட்டது. இந்நேரத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் - வெஜிடபிள் ரோல்ஸ், சமோஸா, பல்சுவை குளிர்பானம் ஆகியன சிற்றுண்டியாகப் பரிமாறப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. KCGC அமைப்பின் துணைத்தலைவர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
காயல் எஸ்.இப்னு ஸஊத், வழக்குரைஞர் அஹ்மத், தொழிலதிபர் எல்.கே.கே.லெப்பைத்தம்பி, ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், வழக்குரைஞர் எல்.எஸ்.எம்.ஃபைஸல், ஏ.எச்.ஃபாரிஸ், கே.எம்.என்.அபூபக்கர், காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் நெய்னா முஹம்மத் உள்ளிட்டோர் கூட்டத்தில் தமது கருத்துக்களைக் கூறினர்.
KCGC அமைப்பை வலுப்படுத்தல், அமைப்புக்கு புதிய செயல்திட்டங்களை வடிவமைத்தல், அரசு உதவிகளை சிறுபான்மையினர் பயன்படுத்த வேண்டியதன் அவசியம், கல்வி - வேலைவாய்ப்புகளைப் பெறல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சி நிறைவு:
அமைப்பின் துணைச் செயலாளர் பல்லாக் சுலைமான் நன்றி கூற, துஆ - கஃப்பாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சியில், சென்னையில் வசிக்கும் சுமார் 130 காயலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, KCGC அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாக்கம் மற்றும் படங்கள்:
S.K.ஸாலிஹ்
[துணைத்தலைப்புகள் இணைக்கப்பட்டது @ 11:21 / 16.04.2013] |