உலக காயல் நல மன்றங்களை மருத்துவ உதவித் துறையில் ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணையவும், காயல்பட்டினத்தில் பொதுமக்களின் தேவையற்ற மருத்துவ செலவினங்களைக் குறைத்திட செயல்திட்டம் வகுத்திடவும், துபை காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாப் புகழும், புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ்வுக்கே!
துபை காயல் நல மன்றத்தின் ஏப்ரல் 2013 மாத செயற்குழு கூட்டம்> இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின்> மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் வில்லாவில், மூத்த உறுப்பினர் எம்.இ.ஷெய்க் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் முத்து முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - காயலர் தினம் - 2013 நிகழ்ச்சி மீளாய்வு:
மன்றத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட "காயலர் தினம் 2013" - பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சியின் நிறைகுறைகள் குறித்து மிக விரிவாகப் பேசப்பட்டு, எதிர்வரும் காலங்களில் குறைகளைக் களைந்து, நிகழ்ச்சிகளை இன்னும் மெருகேற்றி நடத்திட தேவையான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது.
தீர்மானம் 2 - உறுப்பினர்களை அதிகரித்தல்:
இதுவரை மன்றத்தில் உறுப்பினராகாதவர்களைக் கண்டறிந்து, அதிகளவில் மன்றத்திற்கு உறுப்பினர்களை சேர்க்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - காயலர்களின் மருத்துவ செலவினங்களைக் கட்டுப்படுத்தல்:
நமது ஊரில் கிட்னி பாதிப்பால் அவதியுறும் மக்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது கவலைக்குரிய விஷயம். கிட்னி பழுதடைந்து, அதன் சுத்திகரிப்பிற்காக (டயாலிஸிஸ்) மக்கள் செய்யும் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போவது, இன்னபிற நோய்களுக்கும் கணக்கின்றி செலவாகுவது ஆகியவற்றைத் தவிர்த்து - மாற்று வழிகளில் குறைந்த செலவினத்தில் பொதுமக்களை மருத்துவ வசதிகள் பெற்றிடச் செய்யும் நோக்குடன், நமதூர்வாசிகளிடமும், மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளிடமும் கலந்தாலோசித்து செயல்திட்டம் வகுக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய இசைவு:
மைக்ரோகாயல் என்ற அமைப்புடன் சேர்ந்து உருவாகும் SHIFA என்ற ஒருங்கினைந்த மருத்துவ உதவிக் குழுவை இம்மன்றம் அங்கீகரிப்பதோடு, அதன் நிர்வாகச் செலவுகளை சரி செய்ய - மன்றத்தின் பங்களிப்பாக ஆண்டொன்றுக்கு ரூபாய் 25,000 அளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
SHIFA அமைப்பினர் நமதூரின் மருத்துவ செலவிற்காக அல்லல் படுவோருக்கு தகுந்த சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவதோடு, ஏனைய மருத்துவ மையங்களுடன் தொடர்புகொண்டு நம்மவரின் மருத்துவ செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் உதவியையும் செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டியுபசரிப்பு செய்யப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |