தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் தாது மணல் முறைகேடாக எடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் தங்களது முதல் கட்ட கள ஆய்வை புதன்கிழமை முடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் சில இடங்களில் அரசின் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளப்படுவதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, தூத்துக்குடிக்கு கடந்த 12-ம் தேதி வந்த ககன்தீப் சிங் பேடி மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் சிறிது நேரம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளை 6 குழுக்களாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆட்சியர் எஸ். சந்தனகுமார் தலைமையில் விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் பகுதியிலும், துணை ஆட்சியர் வி. மோகனசந்திரன் தலைமையில் விளாத்திகுளம் வட்டம் வைப்பாறு பகுதியிலும், துணை ஆட்சியர் பி. ரத்தினசாமி தலைமையில் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு பகுதியிலும், துணை ஆட்சியர் ஏ. லாரன்ஸ் தலைமையில் திருச்செந்தூர் வட்டம் மாதவக்குறிச்சி பகுதியிலும், துணை ஆட்சியர் என். சக்திவேல் தலைமையில் சாத்தான்குளம் வட்டம் பெரியதாழையிலும், துணை ஆட்சியர் செல்வநாதன் தலைமையில் சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்து பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் தாது மணல் அள்ள அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் நில அளவையர் மூலம் அளக்கப்பட்டது. இங்கு சில இடங்களில் விதிமுறைகளை மீறி இருப்பதாக கருதப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் குறித்துக் கொண்டனர்.
இதையடுத்து, மூன்றாம் நாளான புதன்கிழமை பெரியதாழை, மணப்பாடு, வேம்பார் பெரியசாமிபுரம், மாதவக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரியதாழை பகுதியில் நடைபெற்ற ஆய்வை பார்வையிட சென்ற ககன்தீப் சிங் பேடியிடம் மீனவ அமைப்பினர் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல் கட்ட கள ஆய்வை புதன்கிழமை மாலை 4 மணியோடு அதிகாரிகள் முடித்துக் கொண்டனர். பின்னர், தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார், வருவாய் அலுவலர் இரா. முத்து மற்றும் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட குழுக்களின் தலைவர்களாக செயல்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று நாள்களாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மாலை 5.30 மணியளவில் ககன்தீப் சிங் பேடி கார் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதல்கட்ட கள ஆய்வு மூன்று நாள்களாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட கள ஆய்வு ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் என்று கூறிய அவர் வேறு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தகவல்:
தினமணி
|