காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டதை ரத்து செய்து, மாற்றுப் பாதையில் நடைமுறைப்படுத்தக் கோரி, இம்மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் ரவி குமாரிடம், பெரிய நெசவுத் தெரு ஜமாஅத் ஒருவழிப்பாதை ஒருங்கிணைப்பாளர்களான ஜாகிர், புகாரீ ஆகியோர் தலைமையில் நெசவு ஜமாஅத் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
காயல்பட்டினம் நெடுஞ்சாலை இருவழிப் போக்குவரத்தை ஒருவழிப்பாதையாக்கி, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியான பெரிய நெசவுத் தெரு வழியோ போக்குவரத்தை மாற்றி - தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் உத்தரவிட்டார். அதற்கு பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 13 அடி அகலம் கொண்ட சாலையில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டு, பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, காயல்பட்டினம் பேரூராட்சி சிபாரிசு செய்த மாற்றுவழிப் பாதையைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உறுதியளித்து பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிதாக வந்துள்ள ஆட்சியாளர் இந்த மக்கள் படும் அவஸ்தைகளைப் புரிந்துகொண்டு, உடனடியாக மாற்றுப்பாதை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
தகவல்:
தேக் முஜீப்
படம்:
ஜெய்லானீ |