தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
1. வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1,00,000/-(ஒரு இலட்சம் மட்டும்)-க் கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுள்ளவர்கள். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
2. 2014 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (APPLICATIONS) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் தொடர்புடைய
மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக
அரசு முதன்மைச் செயலாளர்,
பொதுத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009
அவர்களுக்கு 15.12.2013 -க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2014 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
யத்தீந்திர நாத் ஸ்வேன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தமிழக அரசு, சென்னை-9. |