உலக நீரிழிவு நோய் தடுப்பு தினத்தினை (நவம்பர் 14) முன்னிட்டு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் நிலை வகிக்கும் நிலையில் இந்தியா மிக வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. 2025ல், இந்தியாவில் மிக அதிகமான அளவில் நீரிழிவுநோய் விளங்குவதோடல்லாமல் நீரிழிவு நோயே இறப்பு ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணமாக விளங்கும் என எதிர்பாக்கப்பபடுகிறது.
தமிழ்நாட்டில் இந்திய மருத்துவக் கழகம் ஆராய்ச்சி மையம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்தமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் விகிதம் 10.4% என்றும், நகர் பகுதியில் இதன் விகிதம் 13.5% எனவும், கிராமப்புறங்களில் இதன் விகிதம் 7.8% உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நம் உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்காமல் போனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் சரியாக உடலில் செயல்படாமல் போனாலோ நீரிழிவுநோய் ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்பு, பாதம் போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிப்படையக்கூடும்.
இந்நோயினைக் கண்டறிய மற்றும் சிகிச்சைக்கு ஆகும் செலவீனங்கள் தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்தை பாதிப்பதோடல்லாமல் ஏழ்மை நிலைக்கு தள்ளுகின்றது. நீரிழிவு நோய் இக்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வயது மூப்பு , மரபணு காரணிகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் மாறி வரும் உணவு முறைகள் ஆகியவற்றால் மிக அதிகமான பாதிப்பை மக்களிடையே ஏற்படுத்தி வேகமாக பரவும் நிலை உள்ளது.
எனவே நீரிழிவுநோயினைக் கண்டறிய மற்றும் கட்டுப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், தொற்றாநோய்களுக்கான கண்டறிதல், தடுப்பு, சிகிச்சை திட்டத்தை ஜுலை 2012ல் 16 முதல் கட்ட மாவட்டங்களிலும், மேலும் ஏப்ரல் 2013ல் தொடங்கி 16 இராண்டம் கட்ட மாவட்டங்களிலும்
செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 30 வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஈட்டுறுதி மருந்தகம் மற்றும் மருத்துவமனைகள், தேர்வு செய்ப்பட்ட ஈட்டுறுதி மருந்தகம் மற்றும் மருத்துவமனைகள் , தேர்வு செய்யப்பட்ட நகராட்சி மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் செல்லும்போது அங்கு நீரிழிவு நோய்க்கான கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சைக்கான மருந்துகள், வாழ்க்கை நடைமுறை மாற்றத்திற்கான ஆலோசனைகள் (LSM), தொடர் கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிந்துரை சேவைகள் ஆகியவையும் அளிக்கப்படுகின்றது.
ஜுலை 2012 தொடங்கி செப்டம்பர் 2013வரை 49,03,082 ஆண்கள் மற்றும் பெண்கள் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 2,22,663 நபர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு உரிய சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தமிழக அரசு, சென்னை-9. |