சென்னையில் 1902 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட MUSLIM EDUCATIONAL SOCIETY OF INDIA - MEASI (மியாசி) அமைப்பு, சென்னை ராயபேட்டை பகுதியில் 1951 ஆம் ஆண்டு புதுக்கல்லூரி என்ற பெயரில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினர்கான கல்லூரி ஒன்றினை துவக்கியது. 200 மாணவர்கள் கொண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரியில், தற்போது - காலை மற்றும் மாலை அமர்வுகளில், அனைத்து சமுதாய மாணவர்களும் ஏறத்தாழ 5000 பேர் கல்வி பயில்கின்றனர். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயில விரும்பும் காயல் மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளில் புதுக்கல்லூரி பிரதானமானதாகும்.
இந்த கல்லூரி தனது 60வது ஆண்டினை பூர்த்தி செய்ததை ஒட்டி, வைர விழா கொண்டாட்டங்கள் (DIAMOND JUBILEE CELEBRATIONS) - நவம்பர் 12
மற்றும் நவம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றன.
நவம்பர் 12 மாலை 6:30 மணி அளவில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய துணை ஜனாதிபதி எம்.
ஹமீத் அன்சாரி, தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு, வைர விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார்.
துணை ஜனாதிபதி எம். ஹமீத் அன்சாரி தனது உரையில் கூறியதாவது:
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 18.4 சதவீதத்தினர் சிறுபான்மையினர். அதாவது 18.50 கோடி மக்கள்
சிறுபான்மையினர். இது இப்போது 22 கோடியாக உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இதில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தினர், அனைத்து வகையான மனித மேம்பாடுகளிலும் பின்தங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தினர் மீது மட்டும் இதுபோன்ற பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக 12-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது,
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இந்தியா பெற்று வரும் வளர்ச்சியின் பயனை பெரும்பான்மையான சமூகத்தினர் பெற்று அனுபவித்து
வரும் நிலையில், முஸ்லிம் சமூகத்தினருக்கு அந்த பயன் முழுமையாக சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கின்றன. மற்ற சமூகத்தினருடன்
ஒப்பிடும்போது, கல்வியிலும் முஸ்லிம் சமூகத்தினர் பின்தங்கியுள்ளனர்.
அரசு அறிவிக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் முறையாகவும், முழுமையாகவும் இவர்களைச் சென்றடையாததும் இதற்கு ஒரு காரணம். இதற்கான
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
எனவே, நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் மேம்பாடு தவிர்க்க முடியாதது. அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க முடியும்.
இவ்வாறு தனது உரையில் துணை ஜனாதிபதி கூறினார்.
தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசையா முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.
வாசன், மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் கே. ரஹ்மான் கான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் தன் உரையில் தெரிவித்ததாவது:
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் முஸ்லிம் அமைப்புகளால் அதிக கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த சமூகத்தினரிடையே உயர்
கல்வியை பரப்பும் சிறந்த சேவையை செய்து வருகின்றனர்.
ஆனால், சச்சார் கமிட்டியின் அறிக்கை இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவலை
தெரிவிக்கின்றது.
முஸ்லிம் கல்வியில் பின்தங்கிய நிலை மாறும் வகையில், முஸ்லிம் சமூகத்தினர் மேலும் அதிக கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு தனது உரையில் அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:
சிறுபான்மையினரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு, அதற்காக "சிறுபான்மை நலத் துறை' என்ற தனி அமைச்சகத்தையே
உருவாக்கியிருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
2013-14 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு ரூ. 3,511 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு
ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும்.
மவுலானா அசாத் கல்வி மானிய இருப்புத் தொகை ரூ. 750 கோடியிலிருந்து, 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ. 1,500 கோடியாக
உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அமைச்சகமும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 15 சதவீதத்தை சிறுபான்மையினர்
நலனுக்காக செலவிடவேண்டும் எனவும் மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுபோன்று சிறுபான்மையினரின் மேம்பாட்டில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு தனது உரையில் அவர் கூறினார்.
விழாவில் சிறந்த கல்வியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதினை சீதக்காதி டிரஸ்ட் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சார்பாக அவர் மகன் அப்துல் காதர் புஹாரி, மறைந்த சதக் டிரஸ்ட் எஸ்.எம். ஹமீத் அப்துல் காதர் சார்பாக அவர் தம்பி எஸ்.எம். யூசுப் சாஹிப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவ்விருது விஐடி வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.
நவம்பர் 13 அன்று புதுக்கல்லூரி கலையரங்களில் - காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, HIGHER EDUCATION IN INDIA -
MINORITIES PERSPECTIVE என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தனராக மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் கே.
ரஹ்மான் கான் கலந்துக்கொண்டார்.
நவம்பர் 13 அன்று மதியம் 2 மணிக்கு இளைய தலைமுறை உருவாக்கத்தில் பெரிதும் பங்களிப்புச் செய்வோர் பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற
தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நவம்பர் 13 அன்று மாலை 6:30 மணிக்கு துவங்கிய நிறைவு நிகழ்ச்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், சென்னை
காப்புரிமை மேல்முறையீடு வாரியத்தின் தலைவருமான, நீதிபதி கே.என்.பாஷா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள்
தலைமை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
வைர விழா நிகழ்ச்சிகளில் காயலர்கள் ...
புகைப்படங்கள்:
எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ்
மற்றும்
PRESS INFORMATION BUREAU, NEW DELHI |