உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஜகாத் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 55 முதல் 60 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த மூன்று ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும் (2013-14) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 10.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த 03-11-2013 அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்டத்தில் ஜகாத் நிதிக்கு நேர்காணல் செய்திட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருள், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாசர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் முன்னாள் பேராசிரியரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவருமான ஹாஜி சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது,பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் இந்நேர்காணல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
22 மாணவர்கள், 3 மாணவியர் உட்பட மொத்தம் 25 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான ரூ.2,40,600/-) அடுத்த சில தினங்களில் வழங்கி முடிக்கப்பட்டது.
திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களின் மக்களுக்கு இந்நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண் (மெரிட்) பெற்றிருந்த மாணவ-மாணவியருக்கு மற்ற மாணவர்களை விட கூடுதலாக உதவித்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பாலும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., P.hd., கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் - பிஸியோதெரோபி, எம்.காம்.,உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.
இக்ராஃ ஜகாத் நிதியைப் பொறுத்தவரை 2010-11 ஆம் வருடம் ரூபாய் 48,800/- கிடைக்கப் பெற்று 5 மாணவ -மாணவியருக்கும், 2011-12 ஆம் வருடம் ரூபாய் 91,000/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும், 2012-13 ஆம் வருடம் (சென்ற வருடம்) ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும், இவ்வருடம் (2013-14) ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கபட்டுள்ளது. இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஜகாத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கிய சகோதரர்களுக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இன்ஷா அல்லாஹ்! இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமாக ஜகாத் நிதி கிடைக்கப் பெற்று, அதனை முறையாக ஏழை- எளிய மாணவர்களுக்கு வழங்கி அதன்மூலம் அவர்கள்தம் வாழ்வை பிரகாசம் பெறச் செய்வோமாக!அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக!ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |