வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (சனிக்கிழமை) மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது.
இதன் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியது:
வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நாகப்பட்டினத்துக்கு 570 கி.மீ. தூரத்தில் இருந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வட மேற்கு திசையில் வேகமாக நகர்ந்து தீவிரமடைந்து வட தமிழக கரையை நாகப்பட்டினத்துக்கு அருகே கடக்கும்.
இதனால் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும். கடலோர வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், நடுக்கடலில் இருப்பவர்கள் உடனே கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல்:
தி இந்து |