வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று, ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ விளக்கப் பொதுக்கூட்டம் நடத்திட - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட சர்வகட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கலந்தாலோசனைக் கூட்டம்:
தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் நகர அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பொதுநல இயக்கங்களின் பிரதிநிதிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இம்மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர் தலைமையில் நடைபெற்றது.
சர்வ கட்சியினர், பொதுநல அமைப்பினர் கருத்துரை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அப்துல் அஜீஸ், நகர்மன்ற உறுப்பினர்களாக கே.ஜமால், ஜெ.அந்தோணி, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மகேஷ், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஹனீஃபா, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், காங்கிரஸ் கமிட்டி சார்பில் காயல் முத்துவாப்பா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஹஸன், காயிதேமில்லத் பேரவை சார்பில் எம்.எல்.ஷேக்னா லெப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தீர்மானங்கள்:
கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ‘ரயில் மறியல் போராட்டம் ஏன்?’ விளக்கப் பொதுக்கூட்டம்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடையை விரிவாக்கவும், உயர்த்தவும், மேற்கூரையமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்த, ஜனவரி 07ஆம் தேதி நடைபெற்ற நகரின் சர்வகட்சியினர் – பொதுநல அமைப்பினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ எனும் தலைப்பில், விளக்கப் பொதுக்கூட்டத்தை, வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - மூவாயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு:
பிப்ரவரி 18ஆம் தேதி நடத்தப்படும் ‘ரயில் மறியல் போராட்ட’த்தில், காயல்பட்டினத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஏற்பாட்டில் 3 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்திட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - ஜமாஅத் நிர்வாகிகளுடன் சந்திப்பு:
‘ரயில் மறியல் போராட்டம்’ குறித்து விளக்குவதற்காக, காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகளின் நிர்வாகிகளைக் குழுவாகச் சென்று சந்திப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை அனுப்ப காயலர்களுக்கு வேண்டுகோள்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் இடைநின்று போன பணிகளை விரைந்து முடிக்கக் கோரி,
உயர்திரு கோட்ட மேலாளர் அவர்கள்,
தென்னக ரெயில்வே,
மதுரை மண்டலம், மதுரை
எனும் முகவரிக்கு, உடனடியாக கோரிக்கை மனுக்களை அனுப்பி வைத்திட, உலகெங்கும் வாழும் அனைத்து காயலர்களையும், நகர்நல அமைப்புகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகரின் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |