காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், IUDM திட்ட நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியைக் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வந்தது.
இச்சாலைப் பணிகளில் முறைகேடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நெய்னார் தெருவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, இதுவரை அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 321 ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது என சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வறிக்கை அனுப்பியிருந்தார்.
இம்முறைகேட்டிற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.
இது ஒருபுறமிருக்க, நெய்னார் தெரு தவிர இதர அனைத்துப் பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணி பின்னர் நிறைவு செய்யப்பட்டது. நெய்னார் தெருவில் இடைநின்று போன சாலைப்பணிகள் தொடரப்படாத நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள் வியாழக்கிழமையன்று 16.00 மணியளவில், நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளர் கனகராஜ் ஆய்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் (CMA) உத்தரவின் பேரில், இம்மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 22.00 மணியளவில், நெல்லை பொறியியல் கல்லூரியிலிருந்து மாணவர் குழுவினர் நெய்னார் தெரு வந்து, நிலுவையிலுள்ள சாலையின் மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர்.
அதனை அவர்கள் ஆய்வு செய்து, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதனடிப்படையில் இச்சாலைப் பணிகள் தொடரும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளார்.
இச்சாலைப் பணி மீதான விசாரணையின் நடப்பு நிலையை, திருநெல்வேலியிலுள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்தில் கேட்டறிவதென - அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டமொன்றில் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி:
சன்ஷைன் புகாரீ
நெய்னார் தெரு சாலை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |