காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் இந்திய குழுவினரின் - அமைப்புகளுடனான சந்திப்புகள் - மார்ச் 24 (திங்கள்), மார்ச் 25 (செவ்வாய்) ஆகிய இரு தேதிகளுக்கு
திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 23 ஞாயிறு ஓய்வு தினத்தில் - குழுவினர், டெட்ராய்ட் நகருக்கு அருகில் உள்ள சில இடங்களுக்கு சென்றனர்.
அமெரிக்காவில் இஸ்லாம் அதிகமாக வளர்ந்து வரும் மதங்களில்
ஒன்று. பல்வேறு தகவல்கள்படி இங்கு 25 லட்சம் முஸ்லிம்கள் முதல் 70 லட்சம் முஸ்லிம்கள் வரை உள்ளனர். மேலும் 2000 க்கும் மேற்ப்பட்ட
இஸ்லாமிய வணக்கஸ்தலங்களும் இங்கு உள்ளன.
அதிகம் முஸ்லிம்கள் வாழும் மாநிலங்களில் மிசிகனும் ஒன்று. மேலும் - டெட்ராய்ட் நகருக்கு அருகில் உள்ள டியர்போர்ன் நகரில் - முஸ்லிம்கள்
30 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அமெரிக்க நாடளவில் ஷியா முஸ்லிம்கள் குறைவாக இருந்தாலும், மிசிகன் பகுதியில் பெருவாரியான
எண்ணிக்கையில் உள்ளனர்.
வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் - டியர்போர்ன் நகர் அருகே - 2005ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 14 மில்லியன் டாலர்
செலவில் (தற்போதைய மதிப்பீட்டின்படி சுமார் 80 கோடி ரூபாய்) கட்டப்பட்ட ISLAMIC CENTER OF
AMERICA, ஷியா முஸ்லிம்களின் பள்ளியாகும். இப்பள்ளியினை இந்தியாவில் இருந்து சென்றிருந்த குழுவினர் ஞாயிறு அன்று பார்க்க
சென்றனர்.
அடுத்ததாக குழுவினர் - டியர்போர்ன் பகுதியில் உள்ள - பிரபலமான, THE HENRY FORD என்ற அருங்காட்சியகத்திற்கு சென்றனர். ஹென்றி ஃபோர்ட் - ஃபோர்ட்
கார் நிறுவனத்தின், நிறுவனர். இவர் 1906ம் ஆண்டு சேகரிக்க துவங்கிய அமெரிக்க வரலாற்றோடு பின்னிய நவீன கண்டுபிடிப்புகள், இன்று வளர்ந்து - 12
ஏக்கர் நிலப்பரப்பில், பழம்பெரும் ரயில் வண்டிகள், கார்கள் போன்றவைகளை கொண்ட காட்சியகமாக உள்ளது. Edision Institute என்ற பெயரில்
1929ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி, ஹெர்பெர்ட் ஹூவரால் துவக்கிவைக்கப்பட்டது.
குழுவினர் அமெரிக்காவில் இருக்கும் 3 வாரங்களில் - அவர்களுக்கு பல்வேறு நகரங்களில், பல்வேறு அமைப்பினரை சந்திக்கவும், பல்வேறு
இடங்களை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் - அமெரிக்கர் இல்லங்களுக்கு விருந்தினராக செல்லவும், பள்ளிக்கூடம்
பார்க்கவும் மற்றும் தன்னார்வ பணியாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வரிசையிலான நிகழ்ச்சிகளில் ஒன்றாக - மிச்சிகன் மாநிலத்தின், ப்லூம்பீல்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆல்ஸ்ட்ரோம் இல்லத்திற்கு -
குழுவினர் மாலை 5:30 மணியளவில், உணவு விருந்துக்கு, சென்றனர். அங்கு அவர்களை - பில் மற்றும் சூ ஆல்ஸ்ட்ரோம் (Bill/Sue Ahlstrom) தம்பதியினர் வரவேற்றனர். பில் ஆல்ஸ்ட்ரோம் - ஓய்வு பெற்ற கட்டிடக்கலைஞர்.
1970 களில் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து கார் ஒன்றில் - ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா
உட்பட பல நாடுகளில், ஏறத்தாழ 9 மாதங்கள் (50,000 கிலோமீட்டர்) பயணம் செய்ததை தம்பதியினர் - குழுவினருடன் நினைவு கூறினர்.
இந்தியாவில் 3 மாதங்கள் இருந்ததாகவும், தாஜ் மஹாலை பார்த்தது, சிதார் கலைஞர் பண்டிட் ரவி சங்கரை சந்தித்தது, மகாபலிபுரம் வந்தது என
பல அனுபங்களையும் நினைவு கூர்ந்து, அக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை குழுவினரிடம் காண்பித்து - அந்த நாட்கள் மறக்க
முடியாதவை என்றும் மேலும் அவர்கள் - குழுவினருடன் தெரிவித்தார்கள்.
அந்த பயணங்களில் அந்த நாட்டு மக்கள் தங்களை இன்முகத்துடன் வரவேற்றது தான் - அமெரிக்கா வரும் விருந்தாளிகளை, தங்கள் இல்லம்
அழைத்து விருந்தோம்ப ஆர்வம் ஊட்டியதாக அவர்கள் குழுவினரிடம் தெரிவித்தார்கள். இது போன்ற பயணங்களை அமெரிக்கா ஏற்பாடு செய்யும்போது, ஒரு சில விருந்தினர், தங்கள் நிகழ்ச்சி முழுவதும், தங்கள் இல்லத்தில் தங்கி சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
டெட்ராய்ட் நகரில் குழுவினர் - மார்ச் 26 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|