காயல்பட்டினம் தீவுத்தெருவில், ஈக்கியப்பா தைக்கா அருகில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் முன்புறம் சாலையோரத்தில் இருந்த குடிநீர் வினியோகத்திற்கான பழைய வால்வு தொட்டிகள் அகற்றப்பட்டு, புதிதாக தொட்டி கட்டும் பணியை - ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்து செய்து வருகிறார்.
இன்று 14.00 மணியளவில், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற அப்பகுதியைச் சேர்ந்தவரும் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஐ.ஷெய்க் மொகுதூம், கட்டிடப் பணிக்கு, சாலையோரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட - கட்டிடப் பணிக்குத் தகுதியற்ற மணல் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்து, அப்பகுதி மக்களைத் திரட்டியுள்ளார். கட்டுமானத்திற்கு, மணலுடன் சிமெண்ட்டைக் கலக்க முற்பட்டபோது, அதனை அப்பகுதி மக்கள் தடுத்துள்ளனர்.
சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்ட கட்டிடப் பணியாளர்கள் அவசர அவசரமாக மணலை அள்ளி ட்ராக்டர் வாகனத்தில் கொட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, நகராட்சி அதிகாரிகள் வரும் வரை மணலில் கை வைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதியை உள்ளடக்கிய 07ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணிக்கும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜுக்கும் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினார். தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸாரை ஆணையர் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணியும் நிகழ்விடம் வந்தார்.
அங்கு வந்த நிஸார், தகுதியற்ற மணலைப் பார்வையிட்டதும் கட்டிடப் பணியாளர்களைக் கண்டித்ததோடு, பணிகளை உடனடியாக நிறுத்தக் கூறவே, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர், பயன்படுத்தப்படவிருந்த மணலிலிருந்து சிறிதளவு மாதிரியை சாக்குப் பையில் நகராட்சிக்கு அவர் எடுத்துச் சென்றார்.
இந்நிகழ்வு காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டமையால், ஏற்கனவே காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகிலுள்ள மூப்பனார் ஓடை பாலம் அடுத்த ஒரே மழையில் கரைந்தோடியது குறிப்பிடத்தக்கது. |