காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர்.
குழுவினர் - மார்ச் 21 வெள்ளிக்கிழமையன்று காலை 9:15 மணியளவில், பால்டிமோர் நகரில் உள்ள MARYLAND TECHNOLOGY ASSISTANCE PROGRAM (MDTAP) அமைப்பின்
அலுவலகத்திற்கு சென்றனர். மேரிலன்ட் மாநிலத்தின் இயலாமை துறையின் (MARYLAND DEPARTMENT OF DISABILITIES) கீழ் இவ்வமைப்பு
இயங்குகிறது. இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் - உடலில் குறைப்பாடு உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர்கள் இயல்பாக செயல்புரிய
பொருத்தமான உதவிப்புரியும் தொழில்நுட்பத்தை (ASSISTIVE TECHNOLOGY) வடிவமைப்பதாகும்.
குழுவினருக்கு - இவ்வமைப்பின் மூலம் வெளியிடப்படும் நவீன தொழில்நுட்ப பொருட்கள் குறித்த விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பினை தொடர்ந்து, குழுவினர் - பால்டிமோர் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, மேரிலன்ட் மாநிலத்தின் தலைநகர்
அன்னபோலிஸ் புறப்பட்டனர். அங்கு 11:45 மணிக்கு, அவர்களுக்கு - அம்மாநில சட்டமன்ற அவை உறுப்பினருடன், சந்திப்புக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
மேரிலன்ட் மாநிலத்தின் சட்டசபை - இரு அவைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 47 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு செனட்
உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு, 47 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவை (HOUSE OF SENATE) உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3
உறுப்பினர்கள் என 141 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் அவை (HOUSE OF DELEGATES) உள்ளது. இரு அவைகளின் உறுப்பினர் பதவி காலம் -
4 ஆண்டுகளாகும்.
11:45 மணியளவில் - மேரிலன்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகர -
தொகுதி எண் 46 உறுப்பினர், லூக் கிளிப்பிங்கரை குழுவினர் சந்தித்தனர். வழக்கறிஞரான இவர் - 2010 முதல், மேரிலன்ட் மாநிலத்தின் HOUSE
OF DELEGATES உறுப்பினராக உள்ளார். உறுப்பினர் லூக் கிளிப்பிங்கர் - எவ்வாறு மக்கள் தேவை, சூழ்நிலை அறிந்து சட்டங்கள் இயற்றப்படுகின்றன
என குழுவினருக்கு விளக்கினார்.
குறிப்பாக - சமீபத்தில், மொபைல் போன் பேசிக்கொண்டு வண்டி ஒட்டி சென்ற ஒருவரால் ஏற்பட்ட விபத்தினை தொடர்ந்து - ஒரு சிறுவன்
மரணம் அடைந்தது குறித்து விளக்கினார்.
டிசம்பர் 2011 இல், மேரிலன்ட் மாநிலத்தில், தனது பெற்றோருடன் - காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த ஜாக் ஒவன் என்ற 5 வயது சிறுவன்,
மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிவந்த ஒரு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், உயிர் இழந்தான். அந்த வாகன ஒட்டிக்கு,
சட்டத்தில் இதற்கு வேறு தண்டனை இல்லாததால், 1000 டாலர் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
2011ம் ஆண்டு விபத்தில் மரணித்த ஐந்து வயது சிறுவன் ஜாக் ஒவன்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் லூக் கிளிப்பிங்கர் - புதிய சட்டம் ஒன்றை, இறந்த சிறுவனின் பெயரில் - மேரிலன்ட் மாநில
சட்டசபையில் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி - மொபைல் போன் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தினால், 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கி,
5000 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
மேரிலன்ட் சட்டமன்றத்தில் தான் அறிமுகம் செய்துள்ள புதிய சட்டம் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, சட்டமாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும்
குழுவினரிடம் அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினருடனான சந்திப்பினை தொடர்ந்து, குழுவினர் கம்ப்ரிளிஸ் (GAMBRILIS) நகரில் உள்ள MAKKAH LEARNING CENTER என்ற பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக சென்றனர். இப்பள்ளியில்
பெண்களுக்கு என தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இக்குழுவினர் இருக்கும் நாட்களில், வெள்ளியன்று திட்டமிடப்படும் அனைத்தும் நிகழ்ச்சிகளும், ஜும்மா வேளையை மனதில்
வைத்துக்கொண்டு - திட்டமிடப்பட்டுள்ளன என நிகழ்ச்சிகள் ஏற்பாட்டளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜும்மா தொழுகைக்கு பிறகு, மாலை 3:30 மணியளவில் மேரிலன்ட் மாநிலத்தின் வெளியுறவு துறையின் துணை செயலாளரை சந்திக்க,
குழுவினர் அன்னபோலிஸ் நகரில் Fred L. Wineland கட்டிடத்தில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு சென்றனர்.
மேரிலன்ட் மாநிலத்தின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் (Deputy Secretary of
State for Policy & External Affairs) டாக்டர் ராஜன் நடராஜன் - தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், முட்டுக்காடு என்ற கிராமத்தில்
பிறந்தவர். புதுக்கோட்டை ராஜ கல்லூரியில் பி.எஸ்.சி. தாவரவியல் பட்டம் பெற்று, பின்னர் - தஞ்சாவூர் பூண்டி புஸ்பம் கல்லூரியில் எம்.எஸ்.சி.
தாவரவியல் பட்டம் பெற்று, எம்.ஃபில் படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் 1989 ம் ஆண்டு முடித்தப்பின், இவர் அமெரிக்கா சென்று
மேல்படிப்பினை தொடர்ந்தார்.
BIO-TECHNOLOGY துறையில் நிபுணரான இவர் பல நிறுவனங்களில் பணிப்புரிந்து, புதிய நிறுவனங்களையும் உருவாக்கினார். 2011ம் ஆண்டு இவர்
மேரிலன்ட் மாநிலத்தின் தற்போதைய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள இந்திய குழுவினரிடம் - அமெரிக்கா செல்லும்முன், அந்நாட்டில் தாங்கள் பார்க்க விரும்பும் இடங்கள்,
அமைப்புகள், தனி நபர்கள் போன்ற பட்டியல் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் - அமெரிக்க தூதரக அதிகாரிகளால் - கேட்கப்பட்டது.
அமெரிக்க நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் போது, குழுவினரின் விருப்பங்களையும் இறுதி நிகழ்ச்சி நிரலில் இணைக்க அனைத்து முயற்சிகளும்
செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - வழங்கிய பட்டியலில் டாக்டர் ராஜன் நடராஜனும் இடம்பெற்றிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து தான் அமெரிக்கா வந்த அனுபவத்தையும், அமெரிக்காவில் தனது பணிகள், பிறகு மேரிலன்ட் அரசு பொறுப்பு கிடைத்தது
குறித்து விரிவாக - இக்குழுவினருடன் - மாலை 3:30 மணிக்கு துவங்கிய சந்திப்பின் போது - டாக்டர் ராஜன் நடராஜன் பேசினார். மேலும் - தான்
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மேற்கொள்ள விரும்பும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
மாலை 5 மணியளவில் முடிந்த இந்த சந்திப்பின்
போது, மேரிலன்ட் மாநிலத்தின் வெளிநாடுகளுடனான உறவுகள் குறித்த துறையின் உதவியாளர் அனா எனகோவா (Anna Yankova, Assistant for International Affairs, International Division) உடன் இருந்தார்.
டாக்டர் ராஜன் நடராஜன் உடனான சந்திப்பு நிறைவுற்றப்பின், குழுவினர் - பால்டிமோர் நகர் திரும்பினர். மீதியிருந்த ஓய்வு நேரத்தில் - பால்டிமோர்
துறைமுகம் சென்றனர்.
இரசாயன கலப்பில்லாத, இயற்கை உணவு வகைகளை விற்பனை செய்யும் WHOLE PLANET என்ற சிறப்பு அங்காடி ஒன்றிற்கும் குழுவினர் சென்றனர்.
இயற்கை உணவு பொருட்கள் குறித்து நகர்மன்றத் தலைவரின் தேர்தல் அறிக்கையில் இருந்து
இயற்கை உணவினை (ORGANIC FOOD) காயல் நகரில் பெரும் அளவில் அறிமுகம் செய்யவேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
நகர்மன்றத் தேர்தலின் போது - எனது தேர்தல் அறிக்கையில் 17 வாக்குறுதிகளை நான் மக்களுக்கு வழங்கினேன். அவற்றில் ஒன்று - விஷமில்லா
விளை பொருட்கள் (ORGANIC FOODS) நகரில் அறிமுகம் குறித்ததாகும். நகர்மன்றத் தலைவி பொறுப்புக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு
முன்னதாகவே - இயற்கை உணவு பொருட்கள் மீது எனக்கு நிறைய ஈடுபாடு இருந்தது.
காயாமொழி அருகில் உள்ள வள்ளிவிளை என்ற ஊரில் சக்தி குமார் என்ற இயற்கை விவசாயிடம் இருந்து இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட
காய்கறிகளை பெற்று, எனது ரஃபியாஸ் பள்ளிக்கூடத்தில் வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததுண்டு.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களையும், நகர்மன்றத் தலைவி பொறுப்புக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே - தொலைப்பேசியில்
தொடர்புக்கொண்டு, காயல்பட்டினம் அழைத்து வர முயற்சி செய்தேன். ஆனால் - அந்த நிகழ்ச்சியை என்னால் ஏற்பாடு
செய்யமுடியவில்லை.
அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், WHOLE PLANET என்ற பெயரில் இயங்கும் இயற்கை உணவு சூப்பர் மார்க்கெட் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மாம்பலம், தக்காளி, எலுமிச்சை, பால், முட்டை, காய்கறிகள் என அங்குள்ள இயற்கை முறையில் தயாரான பொருட்களின் வகை பிரமிக்க
வைத்தது.
அமெரிக்கா மக்கள் பெரிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து இயற்கை முறையில் தயாரான உணவுக்கு மாறி வருகிறார்கள் என
சொன்னார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மிசேல் ஒபாமா - வெள்ளை மாளிகையில் உள்ள தோட்டத்தில், இயற்கை முறையில் காய்கறிகள் தயாரித்து
தனது குழந்தைகளுக்கு வழங்குவதாகவும் சொன்னார்கள்.
இவ்வாறு தனது முகநூல் பதிவில் நகர்மன்றத் தலைவர் இயற்கை உணவுகள் குறித்து தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் குழுவினர் தங்கள் மேரிலன்ட் மாநில பயணத்தை முடித்துக்கொண்டு, மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு - மார்ச் 22 சனிக்கிழமையன்று, புறப்பட்டனர்.
பால்டிமோர் விமான நிலையத்தில் நகர்மன்றத் தலைவி மற்றும் அவரின் குழுவினரை வழியனுப்ப வந்திருந்த நகர்மன்றத் தலைவியின் கல்லூரி தோழியின் குடும்பத்தினர்
டெட்ராய்ட் சென்றடைந்த நகர்மன்றத் தலைவர் மற்றும் குழுவினர்
டெட்ராய்ட் நகரில் குழுவினர் - மார்ச் 26 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|