காயல்பட்டினம் நகராட்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள அம்மா உணவகத்திற்கான பூமி பூஜை, அம்மா உணவகம் அமையவுள்ள - காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் தென்கிழக்குப் பகுதியில் நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அம்மா உணவக கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எந்த மனிதனும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ஒப்பற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு, திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி என பல திட்டங்களைத் தீட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதயமானதுதான் அம்மா உணவகம். 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என மாநகராட்சிகளில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இப்பொழுது நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக அங்குள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலவர் அம்மா அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெறுவதுடன், இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது.
காயல்பட்டினத்திற்கு இரண்டாவது பைப்லைன் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் தந்து, அதற்கான பணியும் நடைபெற்று வருகின்றது. அப்பணியை விரைவாக முடித்திட நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தியுள்ளளேன். அரசு அறிவிக்கின்ற திட்டங்களை நிறைவேற்றிட நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அப்படி யாராவது முட்டுக்கட்டை போடுபவார்களேயானால் இந்த ஊர் பெரியவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் நன்றி கூற நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்மணத்தி ரவிக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா லிங்ககுமார், திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி தக்கா கோட்டை மணிகண்டன், வட்டாட்சியர் நல்லசிவம், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, பொறியாளர் சிவகுமார், திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி, அதிமுக நகர கிளை துணைச் செயலாளர் ஷேக் அப்துல் காதிர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படங்களுள் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ |