அரிமா சங்க காயல்பட்டினம் கிளையின் சார்பில், அரிமா ஆளுநர் வருடாந்திர வருகை சிறப்புக் கூட்டம், நலத்திட்ட உதவிகளுடன் நடைபெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளையின் சார்பில், 2014ஆம் ஆண்டிற்கான - அரிமா ஆளுநர் வருடாந்திர வருகை சிறப்புக் கூட்டம் 15.05.2014 வியாழக்கிழமை மாலையில் துளிர் கேளரங்கில், பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இயக்குநர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஆண்டோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் கிழுறு முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். உதவித் தலைவர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். உயிர் காக்கும் திட்டம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
அரிமா செயலாளர் எம்.ஏ.முஹம்மத் இம்ரான் செயலர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான அரிமா ஆளுநர் குறித்து எம்.எல்.ஷேக்னா லெப்பை அறிமுகவுரையாற்றினார்.
வாவு எம்.எம்.முஃதஸிம், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர், அரிமா சங்க காயல்பட்டினம் கிளையின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினரான அரிமா ஆளுநர் உபால்டு ராஜ் மெக்கன்னா சிறப்புரையாற்றினார். அரிமா சங்கத்தின் உலகளாவிய சேவைகளை விளக்கிப் பேசிய அவர், காயல்பட்டினம் கிளையின் சேவைகளைப் பாராட்டிப் பேசியதுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்புக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
சிறப்பு விருந்தினரான அரிமா ஆளுநருக்கும், சிறப்பு அழைப்பாளரான ஆண்டோவுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், நோயாளிகளைத் தூக்கிச் செல்வதற்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, கே.எம்.டி. மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு தலா ஒரு ஸ்ட்ரெச்சர் வழங்கப்பட்டது. அத்துடன், நகரின் ஏழைக் குடும்பத்தினருக்கு கிரைண்டர், தையல் மிஷின், இட்லி சட்டி, பண உதவி உள்ளிட்டவை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
அரிமா சங்க காயல்பட்டினம் கிளையின் சிறப்புத் திட்டமான உயிர் காக்கும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய பள்ளிக்கூடங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துல் ரஹ்மான் நன்றி கூற, துஆவுக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் கூட்ட நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிறைவில் அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்
துணைத்தலைவர்
அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
அரிமா ஆளுநர் வருடாந்திர வருகையையொட்டி கடந்தாண்டு நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அரிமா சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |