ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 4ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழு & இஃப்தார் நிகழ்ச்சி:
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 4ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் இம்மாதம் 03ஆம் நாள் - ரமழான் பிறை 05 வியாழன் மாலையில், அபூதபீயிலுள்ள அல்ஃபிர்தவ்ஸ் டவர் 3ஆவது மாடியில் அமைந்துள்ள "அரபு உடுப்பி" [ARAB UDUPI]யின் பேன்குவெட் அரங்கில் [Banquet Hall] சிறப்புற நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி, கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார். அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரவேற்ற அவர், முஸ்லிம்களின் வெற்றி - ஒற்றுமையில்தான் உள்ளது என்றும், அந்த ஒற்றுமையின் பலனாக அரிய பல சேவைகளை நம் சமூகத்திற்கு நாம் வழங்கிடவியலும் என்றும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
தலைமையுரை:
தொடர்ந்து, கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
>>> கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து பல மருத்துவ முகாம்கள் நடத்தியமை...
>>> தாய்லாந்து காயல் நல மன்றத்துடன் இணைந்து - காயல்பட்டினம் நகர இமாம் - முஅத்தின்களுக்கு ரமழான் ஊக்கத்தொகை வழங்கவுள்ளமை...
>>> சிங்கப்பூர் காயல் நல மன்றத்துடன் இணைந்து, நகரின் இயலாநிலைக் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவிகள் வழங்கியமை...
உள்ளிட்ட நலத்திட்டங்களை - பிற அமைப்புகளுடன் இணைந்தும், இன்னும் பல நலத்திட்ட உதவிகளைத் தனியாகவும் அபூதபீ காயல் நல மன்றம் செய்து வருவதாக அவர் தனதுரையில் பட்டியலிட்டுப் பேசினார்.
மன்ற உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்புகளாலேயே இப்பணிகள் யாவும் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்துப் பணிகளும் தங்குதடை - தொய்வின்றி சிறப்புற செய்து முடிக்கப்பட, மன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் தமது சந்தா தொகைகளை நிலுவை எதுவுமின்றி, கடமையெனக் கருதி, குறித்த நேரத்தில் வழங்கி ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றச் செயலாளர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, மன்றத்தின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசியதுடன், வரவு-செலவு கணக்கறிக்கைகயையும் தாக்கல் செய்தார்.
சிறப்புரை:
தொடர்ந்து மன்றப் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ சிறப்புரையாற்றினார். நமது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், நம்மைச் சார்ந்தோர் தமது இல்லாமை காரணமாக பிறரிடம் கையேந்தும் அவல நிலையைத் தவிர்த்திட, உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது - தகுதியுடைய அனைவர் மீதுமத் கடமை என்றும், திருமறை குர்ஆன் வசனங்களிலிலிருந்தும், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய மொழிகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
மன்றத்தின் சேவைகள் சிறப்புற அமைந்திட, சந்தா தொகைகளை நிலுவையின்றி செலுத்திடுமாறும், மன்றம் தொடர்பான நிறை-குறைகள் மற்றும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்துவிடுமாறும் அவர் தனதுரையில் அறிவுறுத்தினார்.
நன்றியுரைக்குப் பின், செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
பஃபே முறையில் இஃப்தார் நிகழ்ச்சி:
கூட்டத்தின் தொடர்ச்சியாக, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பஃபே முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் விதவிதிமான உணவுப் பதார்த்தங்களும், குளிர்பான வகைகளும் பரிமாறி உபசரிக்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளின்போது பதிவு செய்யப்பட்ட படங்களை, https://picasaweb.google.com/106080912367452201392/GBMIFTHARPARTYON03072014?feat=email#slideshow என்ற இணையதள பக்கத்தில் தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்ற செய்தித்துறை பொறுப்பாளர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடனான பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |