DCW தொழிற்சாலையின் தாரங்கதாரா (சோடா ஆஷ்) பிரிவில், உற்பத்தியை நிறுத்தப்போவதாக அதன் நிர்வாகம், பிப்ரவரி 2002இல் அறிவித்தது.
அதற்கு தெரிவிக்கப்பட்ட முக்கிய காரணங்கள்: தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை விலை சந்தையில் அதிகமாக உள்ளது, இதே பொருட்கள்
மலிந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் சூழல், தொழிற்சாலைக்கு அருகில் மூலப்பொருட்கள் இல்லாமை, நிறுவனம் பெற்றுள்ள கடன்கள்
மேல் அதிக வட்டி பாரம், பிற தொழிற்சாலைகளுடன் அளவிடும்போது அதிகமான தொழிலாளர்கள்.
பிப்ரவரி 14, 2002 வெளிவந்த அந்த அறிவிப்பு, மார்ச் 1 முதல் இந்த உற்பத்தி நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
மார்ச் 8 அன்று வெளிவந்த புது தகவல், உற்பத்தி நிறுத்தம் வாபஸ் வாங்கப்படுவதாக கூறியது. இருப்பினும் ஒரு வாரத்திற்கு பின்னர், மார்ச் 16
அன்று வெளிவந்த அறிவிப்பு, தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, தொழிற்சாலை மூடப்படுவதாக தெரிவித்தது.
சில மாதங்களுக்கு மூடப்பட்ட இத்தொழிற்சாலை (குஜராத் பிரிவு), தொழிலாளிகளுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதை காரணம் காட்டி, மீண்டும் ஜூன்
1, 2002 முதல் இயங்க துவங்கியது.
DCW தொழிற்சாலையின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடனான சுமுக உறவு இல்லாமை - தாரங்கதாரா பிரிவில் மட்டும் அல்லாமல்,
காயல்பட்டினம் பிரிவிலும் பலமுறை வேலை நிறுத்தம் வரை கொண்டு சென்றுள்ளது.
உதாரணமாக -
*** அக்டோபர் 1998இல் வேலை நிறத்தம்
*** ஆகஸ்ட் - செப்டம்பர் 2006 இல் 39 நாட்கள் வேலை நிறுத்தம்
*** மே 2008இல் DCW தொழிலாளர்கள் சார்பாக - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தின் முக்கிய
கோரிக்கைகளாக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் சேர்க்கவேண்டும் என்றும், பல ஆண்டுகளாக பணிப்புரிந்து வரும்
ஒப்பந்தப்பணியாளர்களின் பணி, நிரந்தரம் ஆக்கப்படவேண்டும் ஆகியவை எடுத்துவைக்கப்பட்டன.
பணி நீக்கப்பட்ட 41 தொழிலாளர்கள் - தங்கப்பாண்டி என்ற ஒப்பந்ததாரராலும், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED என்ற நிறுவனத்தாலும்
பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என ஊடக செய்திகள் தெரிவித்தன.
PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED என்ற நிறுவனம் தான், DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டங்கள் சம்பந்தப்பட்டது உட்பட பல
ஆவணங்களை அந்நிறுவனத்திற்கு தயாரித்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தொழிற்சாலையின் பலன்கள் என்ன என கூறும்போது, அத்தொழிற்சாலை வழங்கும் வேலை வாய்ப்பு, மறைமுகமாக சிறு தொழில்களுக்கு
கிடைக்கும் வாய்ப்பு, அத்தொழிற்சாலை செலுத்தும் வரி, அத்தொழிற்சாலை ஈட்டும் வெளிநாட்டு செலவாணி போன்றவை கூறப்படும். DCW
தொழிற்சாலையை பொருத்தமட்டில் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விசயங்களும் விவாதத்திற்குரியவை.
DCW தொழிற்சாலையின் ஆண்டறிக்கைகள் - இத்தொழிற்சாலையின் தாரங்கதாரா (குஜராத்) மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் இயங்கும் இரு
தொழிற்சாலை பிரிவுகளிலும் சேர்த்து பணி புரிவோர் எண்ணிக்கையை வழங்குகிறது. ஒவ்வொரு பிரிவிலும் பணிப்புரிவோரின் தனித்தனியான
எண்ணிக்கை இதில் இல்லை.
2004 - 2005 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2336 தொழிலாளிகள்
2005 - 2006 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2525 தொழிலாளிகள்
2006 - 2007 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2336 தொழிலாளிகள்
2007 - 2008 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2346 தொழிலாளிகள்
2008 - 2009 நிதியாண்டின் அறிக்கைப்படி: ---- தொழிலாளிகள்
2009 - 2010 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2290 தொழிலாளிகள்
2010 - 2011 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2090 தொழிலாளிகள்
2011 - 2012 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2122 தொழிலாளிகள்
2012 - 2013 நிதியாண்டின் அறிக்கைப்படி: 2174 தொழிலாளிகள்
2013 - 2014 நிதியாண்டின் அறிக்கைப்படி: ---- தொழிலாளிகள்
இத்தொழிலாளிகளில் பெருவாரியானோர் குறைந்த சம்பளம் பெரும் ஒப்பந்தப்பணியாளர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த
எண்ணிக்கையை பார்க்கும் போது, DCW தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததாக கூறினாலும், அதன்
வருமானம் பல மடங்கு பெருகியிருந்தாலும், அவற்றினால் வேலை பெற்று பயன்பெற்றோர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை
என்பதனை காணலாம்.
DCW தொழிற்சாலையின் காயல்பட்டினம் பிரிவில் எத்தனை பேர் பணிப்புரிகிறார்கள்? EMPLOYEES' PROVIDENT FUND ORGANISATION அமைப்பு வழங்கும்
தகவல்படி - காயல்பட்டினம் பகுதியில் இயங்கும் DCW தொழிற்சாலை சார்பாக 1103 தொழிலாளர்களுக்கு EPF செலுத்தப்படுகிறது. இம்மாதம் (ஆகஸ்ட் 2014)
தொழிற்சாலை சார்பாக எந்தெந்த தொழிலாளர்களுக்கு EPF தொகை செலுத்தப்பட்டது என்ற விபரம் காண இங்கு
அழுத்தவும்.
DCW தொழிற்சாலையின் காயல்பட்டினம் பிரிவில் பணிப்புரியும் ஊழியர்கள், அத்தொழிற்சாலை அவர்களுக்கு வழங்கும் சலுகைகளில் திருப்தி
கொண்டுள்ளார்களா? இது குறித்த ஆய்வு ஒன்றினை - சரத் நாயர் என்ற முதுகலை பட்டப்படிப்பு மாணவர் - சில ஆண்டுகளுக்கு முன்னர்,
இத்தொழிற்சாலையில் மேற்கொண்டார். அந்த ஆய்வறிக்கையை முழுமையாக காண இங்கு
அழுத்தவும்.
இந்த ஆய்வு அறிக்கையின்படி - இந்நிறுவனத்தின் காயல்பட்டினம் பிரிவில் சுமார் 1250 பேர் பணிப்புரிகின்றனர். ஆய்வின் முக்கிய பகுதியாக 100
அலுவலர்களும், தொழிலாளிகளும் - ரேண்டம் முறையில், அவர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியில் வரும்போது தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் 4 பக்க
கேள்வி-பதில் படிவத்தில் கருத்துக்கள் கோரப்பட்டு, பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
உணவு விடுதிகள் வசதி எவ்வாறு உள்ளது, தங்கும் வசதி எவ்வாறு உள்ளது, ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி வசதி எவ்வாறு உள்ளது
போன்று பல கேள்விகளும் அப்படிவத்தில் அடங்கியிருந்தன.
இந்த ஆய்வு முழுமையானது என்று எடுத்துக்கொள்ள போதிய தகவல்கள் இல்லை என்றாலும், இந்நிறுவனம் குறித்து சில முக்கிய தகவல்களை -
இந்த ஆய்வு மூலம் பெற முடிகிறது. குறிப்பாக இங்கு பணிப்புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும்
மருத்துவ சேவை குறித்த தகவல்கள் - இந்த ஆய்வறிக்கை மூலம் பெற முடிகிறது.
ஆய்வில் பங்குபெற்றோரில் -
*** 18 சதவீதம் பேர் மாதத்திற்கு 5,000 ரூபாய்க்கு கீழான சம்பளம் பெறுகிறார்கள்
*** 29 சதவீதம் பேர் மாதத்திற்கு 5,000 - 10,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்
*** 35 சதவீதம் பேர் மாதத்திற்கு 10,000 - 15,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்
அதாவது - 82 சதவீத பேரின் சம்பளம் - இந்த ஆய்வு காலகட்டத்தில் - 15,000 ரூபாய்க்கும் கீழாக இருந்துள்ளது.
இந்த ஆய்வுகளின் முக்கியமான மற்றொரு தகவல் - இத்தொழிற்சாலையின் 19 சதவீத ஊழியர்கள் மட்டுமே, இந்நிறுவனம் வழங்கும் மருத்துவ
வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் அதிருப்தி என்றும், 8 சதவதீம் பேர் மிகவும் அதிருப்தி என்றும், 22 சதவீதம் பேர் -
நடுநிலையான கருத்தும் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை, அதன் சில குறைப்பாடுகளுக்கு மத்தியிலும், சில நிதர்சன உண்மைகளை தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்க வாய்ப்பு உள்ள (RED - LARGE CATEGORY) ஒரு தொழிற்சாலையின் ஊழியர்கள், அத்தொழிற்சாலை
வழங்கும் மருத்துவ வசதிகளில் எவ்வளவு அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பதனையும், அந்நிறுவனத்தின் ஊதிய தொகை வித்தியாசம், மேல் மட்ட
அதிகாரிகளுக்கும், கீழ்மட்ட தொழிலாளிகளுக்கும் இடையே எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதனையும் இந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. |