காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், சி.ஏ. (பட்டய கணக்காளர்) படிப்பு பற்றி நடத்தப்பட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கத்தில், மாணவர்களுக்கு வழிகாட்டுத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும், நிகரில்லா கிருபையும் தங்கள் யாவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமீன்
KCGC நடத்திய சி.ஏ (பட்டய கணக்காளர்) படிப்பு குறித்த பயிலரங்கு விழிப்புணர்வு முகாம்!!!
அன்பிற்குரிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 13.09.2014 (சனிக்கிழமை) அன்று இரவு 07:30 – 09:00 மணிவரை நமது KCGC அலுவலகத்தில் “ஆடிட்டர்” ஆவது எப்படி? என்பது குறித்து பயிலரங்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்ச்சிக்கு கே.சி.ஜி.சி-யின் தலைவர் ஆடிட்டர் அஹமது ரிஃபாய் அவர்கள் தலைமை தாங்கினார். மாணவர் எம்.என்.செய்யித் முஹம்மத் புகாரீ புனித இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அதன்பின், சகோதரர் ஷாமு ஷிஹாபுதீன் அவர்கள் இந்த பயிலரங்கை வழி நடத்தினார். அவர் தனது உரையின் முன்னோட்டமாக சி.ஏ. படிப்பின் மேன்னையை குறித்து எடுத்துக்கூறினார்
பின்னர், சி.ஏ. படிப்பது எப்படி? என்பதை விளக்கப்படத்துடன் விளக்கமளித்து கூறியதாவது:-
சி.ஏ. என்பது சாதிக்க முடியக்கூடிய கல்வி என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் உணர வேண்டும். சி.ஏ. என்ற படிப்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பி.காம்., படித்தாலும் சி.ஏ. பண்ணலாம். பி.காம்., படிக்காமல் நேரடியாகவும் சி.ஏ. பண்ணலாம். சி.ஏ படிக்க குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு முடித்த பின்புதான் சேரவேண்டும் என்ற அவசியமில்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இதற்கான நுழைவுத் தேர்வாகிய Common Proficiency Test (CPT) தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம். +2 தேர்வு எழுதியவுடன் இந்த (CPT) நுழைவு தேர்வை அவர்கள் எழுதலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக சி.ஏ-வில் சேர்ந்துக் கொள்ளலாம்.
அதன்பின் ஐபிசிசி (IPCC) என்று சொல்லப்படும் Integrated Professional Competence Course ஆகிய தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னர் “Article ship” எனப்படும் செயல்முறைப் பயிற்சிக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது ஓர் ஆடிட்டரின் மேற்பார்வையில் மூன்று ஆண்டுகள் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சி.ஏ. படிப்பில் மட்டும் தான் படிக்கும் போதே உதவித் தொகையுடன் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
இப்படிப்புடன் கம்ப்யூட்டர் பயிற்சித் திட்டத்தைக் கண்டிப்பாகப் பூர்த்தி செய்ய வேண்டும். செய்முறை பயிற்சிக்கு முன்பே இதைப் பூர்த்தி செய்ய வேண்டும். செயல்முறைப் பயிற்சிக்குப் பிறகு இறுதித் தேர்வு (Final Exam) எழுத வேண்டும். அதன் பிறகு பொது நிர்வாகம் மற்றும் தகவல் தொடர்புத் திறன் படிப்பை நிறைவு செய்ய வேண்டும். இது 15 நாள் படிப்பாகும். படிப்பை முழுமை செய்த பிறகு இன்ஸ்டிட்யூட்டில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சி.ஏ. படிக்கும் மாணவர்கள் வீட்டில் தினந்தோறும் கட்டாயம் 4 முதல் 6 மணி நேரம் படிக்க வேண்டும். நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான் என்றார். சி.ஏ. தேர்வில் வெற்றி’ என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்!.
சி.ஏ. படிப்பு குறித்த விளக்கப்படம்:
இறுதியாக அவர் பேசுகையில், சமூகத்தில் பொதுவாக வணிகவியல் படித்தால் தாழ்வாக நினைக்கும் போக்கு உள்ளது. உண்மையில் அது தவறு. பரந்து விரிந்த உலகில் அனைத்துப் படிப்பும் தேவையாக உள்ளது. இதுதான் தேவை, இது தேவையில்லை என்ற நிலை கிடையாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன விருப்பமோ அதனை அறிந்து, அவர்கள் விரும்பும் துறையில் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டும்.
பொறியியல் படித்தால் இலட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை, இறுதியாண்டு படிக்கும்போதே உறுதி செய்யப்படும் என்ற போலித்தனமான விளம்பரங்களால் பல மக்கள் சிக்கி தங்களது வாழ்நாள் உழைப்பை வீணடித்து விடுகின்றனர். இந்தியாவில் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை 2013-ல் 1.8 கோடியாக இருக்கின்றது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. (ஆனந்த விகடன் - மே 2014). மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியா டுடே போன்ற பிரபல நிறுவனங்களின் 2013-ம் ஆண்டின் புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி நான்காண்டு படித்து முடித்து பொறியியல் கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணவர்களில் சுமார் 80% பேர் வேலைக்கு தகுதியற்றவர்களாக (Unfit) இருக்கிறார்கள் என தெரிவிக்கிறது.
எனவே யாரோ சொல்கிறார்கள் என்பதாலோ, பெருமைக்காகவோ படிக்காமல், பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தங்களது வாழ்க்கையை தீர்மானிக்கின்ற படிப்பு எது என்று முடிவு செய்துக்கொண்டு அதன்படி தமது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த படிப்பை நாம் தேர்வு செய்து படித்தாலும், அதில் இறைநம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை, முழுமையான அர்பணிப்பு மற்றும் அசாத்திய உழைப்பு இருக்க வேண்டும். நிச்சயமாக கடுமையான உழைப்பிற்குப் பின் வெற்றியைத் தவிர வேறு பரிசு கிடையாது. என இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.ஏ. படிப்பு தொடர்பான பல கேள்விகளை நிகழ்ச்சியில் பங்குக்கொண்ட சகோதரர்கள் கேட்டு, அதற்கான தெளிவைப் பெற்றனர். மேலும், இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நமதூரிலும் நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதிலளித்து பேசிய கே.சி.ஜி.சி-யின் தலைவர் அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியோடும், உங்களைப் போன்ற இன்னும் பல மாணவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப இன்ஷாஅல்லாஹ் அதற்கான் ஏற்பாடு செய்யலாம் என்றார்.
இந்த “சி.ஏ. பயிலரங்க” விழிப்புணர்வு முகாமில் எதிர்பார்த்த அளவில் பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கு கொள்ளவில்லை. இது மனதிற்கு பெரும் வருத்தத்தை தருகின்றது. கல்வி தொடர்பாக அனைத்து வகையிலும் வழிகாட்ட தயாராக இருக்கின்றோம். எனவே KCGC-ன் சேவையை நமது மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். என கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் KCGC-ன் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து துஆ கஃப்ஃபாராவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGCயின் சார்பில் நடத்தப்பட்ட முந்தைய பயிலரங்க நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |