2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 1ஆவது வார்டில் வெற்றிபெற்ற ஏ.லுக்மான், சொந்தக் காரணங்களைக் கூறி - ஜூன் 01, 2013
தேதியிட்ட கடிதம் மூலம், ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, சுமார் 15 மாதங்களாக
எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வார்டுக்கான இடைத்தேர்தல், செப்டம்பர் 18 அன்று (நாளை) நடைபெறவுள்ளது.
இதில் - இந்த வார்டின் மூன்று பிரதான பகுதிகளின் ஒன்றான கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியின் ஊர்க்குழுவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரும்,
மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ வேட்பாளருமான ம.அமலகனியும்,
இதே வார்டின் அதிக வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில் முதலாவதாக உள்ள கோமான் தெருக்களின் ஜமாஅத்தான கோமான் மொட்டையார் பள்ளி
ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான எஸ்.ஐ. அஸ்ரஃபும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு செப்டம்பர் 16 (நேற்று) மாலை 5 மணியளவில் நிறைவுற்றது. தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 22 அன்று
காலையில் வெளிவரும்.
முந்தைய உறுப்பினர் பதவி விலகல் கடிதம் அளித்த நாள் முதல், தேர்தல் அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக
பலரது பெயர்கள் வெளிவந்தன.
கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள், முந்தைய உறுப்பினர் பதவியில் இருந்தபோதும், அவர் பதவி விலகிய பிறகும்,
அப்பகுதியின் நகராட்சிப் பணிகளுக்காக - நகராட்சிக்கு அடிக்கடி வருவர். அவர்களில் ஒருவர் இத்தேர்தலில் நிற்கலாம் என பேசப்பட்டது.
தற்போதைய நகராட்சியின் 02ஆவது மற்றும் 03ஆவது வார்டு பெண் உறுப்பினர்களின் கணவர்கள் போட்டியிட விரும்புவதாகவும்
பேசப்பட்டது.
தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், கடந்த தேர்தலில் போட்டியிட்டு, நான்காவது இடம் பெற்ற
கதிரவன் என்பவருக்கு ஆதரவு கோரி, நகராட்சியின் தற்போதைய இரு உறுப்பினர்கள், கோமான் ஜமாஅத்தை சார்ந்த சில முக்கியஸ்தர்களைச்
சந்தித்த நிகழ்வும் நடந்துள்ளது.
கடந்த தேர்தலில் இரண்டாமிடத்தைப் பெற்ற ம.அமலக்கனியும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் எனவும் பேசப்பட்டது.
கோமான் ஜமாஅத் சார்பாக, எந்த வேட்பாளரையும் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப் போவதில்லை என்ற பேச்சும் வெளிவந்தது.
இவ்வாறு, தெளிவான நிலையில்லாத சூழலில் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. கோமான் நடுத் தெருவை
சார்ந்த எஸ்.ஐ.அஸ்ரஃப் - அ.தி.மு.க. வைச் சார்ந்தவர். கட்சி சார்பாக இந்தத் தேர்தலில் போட்டியிட தன் விருப்பத்தை, நகர கட்சி நிர்வாகிகளிடம்
அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் நகர கட்சி நிர்வாகிகள், தங்கள் பரிந்துரையை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். இதே காலகட்டத்தில்,
ம.அமலக்கனியும் தன் விருப்பத்தை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், திடீரென எஸ்.ஐ.அஸ்ரஃப், தான் கட்சி சார்பாக நிற்க விரும்பவில்லை என்றும், அவ்வாறு தான் நின்றால் தி.மு.க. வாக்குகள்
தனக்குக் கிடைக்காது என்று ஜமாஅத்தினர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மேலிடத்திற்கு ம.அமலகனியின் பெயரைப் பரிந்துரை செய்து அனுப்பியுள்ளனர். அதன்
தொடர்ச்சியாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் - தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்களின் பெயரில்
ம.அமலகனியின் பெயரும் வெளியானது.
கோமான் ஜமாஅத் சார்பாக வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடந்த கூட்டத்தில், இருவரிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் உள் தேர்தல்
நடந்தது. சுமார் 70 பேர் பங்கு கொண்ட இந்த தேர்தலில், 60 வாக்குகள் எஸ்.ஐ.அஸ்ரஃபுக்கும், 10 பேர் நெய்னா முகம்மது என்பவருக்கும்
வாக்களித்துள்ளனர். இந்த முடிவின்படி, அஸ்ரஃப் கோமான் ஜமாஅத் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதன்படி இத்தேர்தல், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவருக்கும், சுயேட்சை வேட்பாளருக்கும் இடையிலான தேர்தல் என - ஒரு சாதாரண
இடைத்தேர்தலாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், இத்தருணத்தில், 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நகர்மன்றத்
தலைவரான ஐ.ஆபிதா ஷேக்கை எதிர்த்துப் பணியாற்றி தோல்வி கண்ட சிலர், பழிவாங்க ஒரு வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலைப் பார்த்தனர்.
அழைக்கப்பட்ட / அழைக்கப்படாத விருந்தாளிகளாகக் களத்தில் இறங்கினர்.
கோமான் ஜமாஅத் வேட்பாளருக்கு - முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் ஆதரவு
தெரிவித்தனர். இதனால், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவருக்கும், சுயேட்சை வேட்பாளருக்கும் இடையிலான தேர்தல், கோமான் ஜமாஅத்துக்கும்,
நகர்மன்றத் தலைவருக்கும் இடையிலான தேர்தல் என சித்தரிக்கப்பட முயற்சி செய்யப்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர் ம.அமலக்கனி, DCW தொழிற்சாலையின் தீவிர ஆதரவாளர் / கைக்கூலி போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு,
அதே கட்சியைச் தற்போது சார்ந்துள்ள நகர்மன்றத் தலைவர் அவருக்கு ஆதரவு கோருவதால் - இந்தத் தேர்தல், காயல்பட்டினம் அனைத்து
மக்களுக்கும், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்குக்கும் இடையிலான தேர்தலாக சித்தரிக்கப்படவும் முயற்சி செய்யப்பட்டது.
இந்த வார்டின் மூன்று பகுதிகளில் ஒரு பகுதி கோமான் தெருக்கள். மற்ற பகுதிகள் - கொம்புத்துறை (கடையக்குடி) மற்றும் அருணாச்சலபுரம்.
எவ்வாறு கோமான் ஜமாஅத் சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாரோ, அது போல கொம்புத்துறை (கடையக்குடி) பகுதி ஊர்க் குழு சார்பாக
(அ.தி.மு.க. ஆதரவுடன்) ம.அமலக்கனி நிறுத்தப்பட்டார். (25 சதவீதததிற்கும் கூடுதலான வாக்குகள் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து இது வரை
ஒருவரும் நகர்மன்ற உறுப்பினர் பொறுப்புக்குத் தேர்வாகவில்லை என்பது குறிப்படத்தக்கது). சுமார் 25 சதவீத வாக்குகள் கொண்ட அருணாச்சலபுரம்
பகுதியிலிருந்து இத்தேர்தலில் எவரும் நிறுத்தப்படவில்லை.
இருவர் மட்டும் களத்தில் உள்ள இத்தேர்தலில் - சொல்லப்படாத பரப்புரையாக - இது முஸ்லிம் வேட்பாளருக்கும், முஸ்லிமல்லாத வேட்பாளருக்கும்
இடையிலான தேர்தல் என்றும், முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக நகர்மன்றத் தலைவர் ஆதரவு கோருகிறார் என்றும் வாய்மொழியாக பரப்புரை
மேற்கொள்ளப்பட்டது.
வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, வழக்கமாக வேட்பாளர்கள், எதிர்வேட்பாளரின் மனுவில் உள்ள குறைகளைக் கூறி, வேட்பு மனுவை
நிராகரிக்க அதிகாரிகளைக் கோருவது வாடிக்கை. 01ஆவது வார்டு வேட்பு மனு பரிசீலனையின்போது,
ம.அமலக்கனி - கடந்த தேர்தலில் செலவு செய்த தொகைக்கான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என எதிர் வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரஃப் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
அது போல, எஸ்.ஐ.அஸ்ரஃபுக்கு இரண்டு வாக்காளர் அட்டை உள்ளது என ம.அமலக்கனி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது வழமையான
விஷயங்கள் என்றாலும், நகர்மன்றத் தலைவர் எஸ்.ஐ.அஸ்ரஃபுக்கு எதிராக - எனவே கோமான் ஜமாஅத்துக்கு எதிராக - அதிக அக்கறை
காட்டுகிறார் என்றும் சித்தரிக்கப்பட்டது.
மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பரிசீலனை முடிந்து, முறையாக தேர்தல் பரப்புரைகளும் துவங்கின.
பரப்புரையின் துவக்கத்தில் இரு அணிகளும் எளிதான வியூகங்களுடன் இருந்தனர்.
எஸ்.ஐ.அஸ்ரஃப் ஆதாரவாளர்கள் வியூகப்படி, ஜமாஅத் வாக்குகள் (சுமார் 600) மொத்தமாக அவருக்குக் கிடைக்கும்; கொம்புத்துறை (கடையக்குடி)
மற்றும் அருணாச்சலபுரம் பகுதியில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பெற்ற 194 வாக்குகளும்
தங்களுக்குக் கிடைக்கும்;
மேலும், கொம்புத்துறையில் இரு பிரிவுகள் உள்ளன... அதில் ஒரு பிரிவைச் சார்ந்தவர்தான் அமலக்கனி; எனவே, மொத்தம் 1400 வாக்குகள்
பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குறைந்தது 800 வாக்குகளாவது பெற்று எஸ்.ஐ.அஸ்ரஃப் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அ.தி.மு.க. பக்கத்தில் - ஆளுங்கட்சி அது என்பதாலும், இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும் கட்சியே வெல்லும் என்ற நம்பிக்கையோடும்
இருந்தனர். அவர்களின் கணிப்புப்படி, கொம்புத்துறையில் உள்ள சுமார் 560 வாக்குகளில் பெருவாரியானவை அமலக்கனிக்கே செல்லும்;
அருணாச்சலபுரத்தில் எவரும் தேர்தலில் நிற்காததாலும், அங்கு எஸ்.ஐ.அஸ்ரஃப் மேல் நிலவும் அதிருப்தியாலும், அங்குள்ள திமுகவின் வாக்குகள்
உட்பட பெருவாரியான வாக்குகள் அ.தி.மு.க.விற்குக் கிடைக்கும்.
மேலும், கோமான் தெருக்களிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் - அ.தி.மு.க. பெற்ற 93 வாக்குகளும், மேலும் அங்கும் எஸ்.ஐ.அஸ்ரஃப்
மேல் நிலவும் அதிருப்தியாலும் - அ.தி.மு.க.வும் 800 வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பரப்புரையைத் துவக்கினர்.
ஆனால், பரப்புரையின் போக்கோ இரு அணிகளுக்குமே எதிர்ப்பார்த்த திசையில் செல்லவில்லை. கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரஃப்க்கு
ஜமாஅத்தில், எதிர்ப்புகள் தென்பட்டன. கோமான் நடுத் தெருவை சார்ந்த இவர், சமூகப் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட்டதில்லை. தனது -
வாக்கு கோரும் துண்டுப் பிரசுரத்தில் கூட, அனைத்து மக்களின் நல்லது கெட்டதில் கலந்துகொண்டவன்
என்ற விபரத்தை மட்டும் எடுத்துரைத்திருந்தார்.
மேலும், இவரின் நட்பு வட்டாரத்தின் மீது, கோமான் ஜமாஅத்தின் உள்ளேயும், அருணாச்சலபுரம் பகுதியிலும் அதிருப்தி உள்ளது.
பரப்புரையின்போது இது வெளிப்படவே, இவரின் ஆதரவாளர்கள் பதற்றம் அடையத் துவங்கினர். ஜமாஅத்திலிருந்து வாக்கு கேட்கச் சென்றபோது,
“அஸ்ரஃப்க்கு பதிலாக நீங்கள் நின்றிருக்கலாமே?” என ஜமாஅத்தின் மூத்தவர் ஒருவரிடம் பெண்கள் சிலர் கூறியுள்ளனர்.
மேலும், நகர்மன்றத் தலைவர் தான் சார்ந்துள்ள அதிமுக கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக முழு வீச்சில் பரப்புரையில் இறங்குவார் என்பதை
ஜமாஅத்தினர் எதிர்ப்பார்க்கவில்லை. அருணாச்சலபுரம் பகுதியில் அவர் மேற்கொண்ட பரப்புரையால், ஆளுங்கட்சியை தோற்கடித்துவிட்டு, எந்த
வசதியும் கிடைக்கவில்லை என்று குறை கூறிப் பயனில்லை என்ற பேச்சு அங்கு வலிமையாக எழவே, எஸ்.ஐ.அஸ்ரஃப் தரப்பில் மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. வாக்குகள் பல - அமலக்கனிக்குச் செல்லலாம் என்ற சூழலும் அங்கு உருவானது. இதுதான் - கோமான் ஜமாஅத்
சார்பாக வெளிவரத் துவங்கிய அறிக்கைகளின் பின்னணி.
அறிக்கைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போதே - இது ‘எளிதாக வென்றுவிடுவோம்’ என நம்புபவர்கள் வெளியிடும் அறிக்கையல்ல என்பது
தெளிவாகத் தெரிந்தது. தான் முழுவதும் நம்பிய கோமான் ஜமாஅத் வாக்குகளைத் தக்க வைக்க, ‘ஜமாஅத் ஒற்றுமை’ என்ற முழக்கம் பெரிய
அளவில் முன்வைக்கப்பட்டது. அதற்கு உதவும் வகையில், ஊரே அஸ்ரஃப்வுடைய வெற்றியை எதிர்ப்பார்க்கிறது என்பது போன்ற காட்சியை
உருவாக்க, நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், வெளியூர்களில் வாழும் ஜமாஅத்தினருக்கும் கடிதங்கள் வெளியிடப்பட்டன.
இது இப்படியெனில், அ.தி.மு.க. பரப்புரையும் எதிர்ப்பார்த்த போக்கில் செல்லவில்லை. நகர அ.தி.மு.க. பல கோஷ்டிகளைக் கொண்டுள்ளது.
அதில் நகர்மன்றத் தலைவர் ஆதரவு கோஷ்டியும் உண்டு. வேட்பு மனு தாக்கல் அன்று, அனைவரும் ஓரிடத்தில் காட்சி தந்தனர். ஆனால், தேர்தல் பரப்புரையிலோ அனைவரும் முழுமையாக இறங்கவில்லை என்பதே உண்மை.
பரப்புரையில் உடன் வந்த சிலரும் கூட - எதிர் வேட்பாளருக்குத் தகவல் கொடுக்கவே வந்தனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அமலக்கனி
ஆதரவாளர்கள் இதனை அறிந்திருந்தும், வெளியில் சொல்ல ரகசியம் ஒன்றும் பெரிதாக இல்லை என்பதால் அதனைக் கண்டுக்கொள்ளவில்லை என்று
தெரிவித்தனர்.
இது தவிர அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்களான - துணைத் தலைவர் மும்பை முகைதீன், 15ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு
ஷிஹாபுதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் அஸ்ரஃபுக்கு ஆதரவாக நின்றனர்.
அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் - குறிப்பாக சுற்றுலாத்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன்
பரப்புரைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியும் தேர்தலை சந்திப்பதால், அதைக் காரணமாகக் கூறி - பரப்புரைக்கு
அமைச்சர் வரவில்லை.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரும், நகர்மன்றத் தலைவரும், சிலருடன் - இரண்டு கட்ட பரப்புரையைச் செய்து முடித்தனர்.
2011 தேர்தலுக்குப் பின் நகர்மன்றத் தலைவருக்கு எதிராக செயல்பட்ட பலர், கடந்த 3 ஆண்டுகளில் அவருக்கு எதிராக வெற்றியையும் காணவில்லை
என்றாலும், வார்டு 01 வெற்றி அதனை ஈடுகட்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஒரு சிலர் நேரடியாகவே களத்தில் உள்ளனர். பலர், பின்னணி
ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அ.தி.மு.க.வின் ஒரு கோஷ்டியோ - அமலக்கனி தோல்வி அடைவது மூலம், நகர்மன்றத் தலைவருக்கு ஆதரவானவர்களின் - அண்மைக்கால
கட்சியில் வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என எதிர்ப்பார்க்கின்றனர்.
நகர்மன்ற உறுப்பினர்களோ, தங்கள் அணிக்கு மேலும் ஓர் உறுப்பினர் கிடைப்பார்; கிடப்பில் கிடக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு தூசி தட்ட
ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு பிரச்சாரத்தில் பங்கேற்று வந்தனர்.
அமலக்கனி தரப்பு - பல அசௌகரியங்களுக்கு இடையிலும், பிரச்சாரத்தை முழுமையாக முடித்த திருப்தியில் உள்ளனர். அஸ்ரஃபுவை விட
அமலக்கனி வார்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்வார்; ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால், அவரின் வாக்குறுதிகள் கைக்கூடும் என்ற மக்களின்
நம்பிக்கை தங்களைக் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
அஸ்ரஃப் தரப்பு - கோமான் ஜமாஅத் வாக்குகள் அமலக்கனிக்கு செல்லாது; அருணாச்சலப்புரம் தி.மு.க. வாக்குகள் அனைத்தும் தங்களுக்கு கிட்டும்
என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
வாக்கு சேகரிப்பு முடிவுற்று, 01ஆவது வார்டு மக்கள் தேர்தலை நாளை நோக்கியுள்ள நிலையில், இறுதி நிலவரம் என்ன?
வார்டு 01 - மூன்று பகுதிகளைக் கொண்டது. அதில், கோமான் தெருக்களின் மொத்த வாக்குகள் 972, கொம்புத்துறை பகுதியின் மொத்த வாக்குகள்
546, அருணாச்சலபுரம் பகுதியின் மொத்த வாக்குகள் 509.
கோமான் தெருக்களின் மொத்த வாக்குகளை விட இதர இரு பகுதிகளின் வாக்குகள் சுமார் 83 அதிகமாகும்.
மேலும் - கடந்த காலங்களில், கோமான் தெருக்களின் வாக்குப் பதிவு சராசரியாக 65 சதவீதம் அளவில் இருந்துள்ளது. ஏனைய இரு பகுதிகளின்
வாக்குப் பதிவுகளும் சுமார் 80 சதவீதம் வரை இருந்துள்ளன. இதனால், வாக்குப்பதிவு நாளன்று, இரு பகுதிகளின் (கோமான் தெருக்கள் - கோமான்
தெருக்கள் அல்லாதவை) வாக்குகள் வித்தியாசம் சுமார் 200 வரை அதிகரிக்கும்.
கோமான் ஜமாஅத்திற்குள் நிலவும் அஸ்ரஃப் மீதான அதிருப்தியை சரிக்கட்ட அவரின் ஆதரவாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டனர். ஒற்றுமை
என்ற கோஷமாக அது வெளியில் தென்பட்டாலும், அஸ்ரஃபை எதிர்ப்பவர்களிடம் நல்லது - கெட்டதற்கு ஜமாஅத்துதான் வரவேண்டும் என்ற
தொனியிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இங்கு எவ்வாறு வாக்கு பிரியும் என்பதை உறுதியாகக் கூற இயலாது.
அருணாச்சலபுரத்தைப் பொருத்த வரை, வளர்ச்சித் திட்டங்களுக்கு - ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி அவசியம் என்ற பரப்புரை, திமுக
வாக்காளர்களிடம் எடுத்து வைக்கப்பட்டது. எத்தனை தி.மு.க.வினர் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும் உறுதியாகக் கூற
இயலாது.
இத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை இவ்விரு அம்சங்களே இறுதியில் தீர்மானிக்கும் என்று தெரிகிறது.
வாக்குப் பதிவு நாள் நாளை செப்டம்பர் 18 வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22 திங்கட்கிழமை காலை 8 மணி முதல். |