இந்தியாவின் பல பகுதிகளிலும் தொடரும் மதக் கலவரங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு மதுவிலக்கு திட்டத்தை ஆதரித்தும், சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 15ஆம் நாள் திங்கட்கிழமையன்று காலை 11 மணிக்கு சென்னை ராயபுரம் மேற்கு மாதா சர்ச் தெருவில் உள்ள ரம்ஜான் மஹாலில் தொடங்கியது.
தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை கேரள மாநிலத் தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தொடங்கி வைத்தார். தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (முன்னாள் எம்.பி.) வரவேற்புரை நிகழ்த்தினார்.
தேசியப் பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உள்ளிட்ட கேரள மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் தலைவர், செயலாளர்கள், முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திரத் தொழிலாளர் யூனியன், வனிதா லீக் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 150 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு:
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை இக்கூட் டம் வன்மையாக கண்டிக்கிறது. தங்களின் சுதந்திர நாட்டு கோரிக்கைக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு உலக நாடுகள் தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வர வேண்டும் என்று இக்கூட்டம் வேண்டுகோள் வைக்கிறது.
நீதி மற்றும் சர்வதேச ஒப்பந் தங்களுக்கு விரோதமாக இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியரை கொன்று குவித்து வருவதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புகள் ஆதரிப்பதை இக்கூட்டம் கடுமையாக கண் டிக்கிறது. இஸ்ரேலின் இந்த எதேச்சதிகார போக்கிற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் நீதியும், நேர்மையும் ஆகும்.
இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை இந்திய அரசு கடைபிடிப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும், மகாத்மா காந்தி காலம் தொட்டு பாலஸ்தீனுக்கு ஆதரவு காட்டி வந்த இந்திய அரசின் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
பாலஸ்தீனில் ஏற்படும் பதட்டம் மத்திய தரைக்கடல் நாடுகளில் பரவும் நிலை உருவானால் அரபு நாடுகளில் பணிபுரியும் பல லட்சம் இந்திய மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகி விடும் என்பதையும் இந்திய அரசுக்கும் - அரபு நாடுகளுக்கும் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு விடும் என்பதையும் இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.
மத்திய ஆசியாவில் அமைதி நிலவிடும் வகையில் இந்திய அரசின் இஸ்ரேலிய கொள்கை அமைய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு:
ஐ.எஸ்.ஐ.எஸ். அல்காய்தா மற்றும் இதுபோன்ற தீவிரவாத இயக்கங்கள் இஸ்லாத்தின் பெயரால் பயங்கரமான மனித விரோத காரியங்களில் சில நாடுகளில் ஈடுபட்டு முஸ்லிம் உலகிற்கு பெருத்த அவமானத்தையும், வேதனையையும் உருவாக்கி வருவதோடு இளம் தலைமுறையினரை வழிகெடுக்கும் வகையிலும் இயங்கி வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரபு நாடுகள் தங்களின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் காப்பதற்கு முன்வந்துள்ளதை இக்கூட்டம் வரவேற்றுப் பாராட்டுகிறது. இத்தகைய தீவிரவாத இயக்கங்களின் மனிதாபிமான மற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தங்களின் சகோதர, சகோதரிகளுக்கு மிகப்பெரும் கொடுமை செய்து வருவதை கடுமையாக கண்டிப்பதுடன் இவைகளுக்கு எந்த சூழ்நிலையிலும் நமது ஆதரவை தந்து விடக்கூடாது என்பதையும் இக்கூட்டம் தெரியப்படுத்துகிறது.
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்:
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய ஜனநாயக முன்னணி அரசின் பாசிச போக்குகளை முறியடிப்பதற்கு ஜனநாயக சமயசார்பற்ற அரசியல் சக்திகளை ஒன்று படுத்துவது ஒன்றே சரியான வழி என்று இக்கூட்டம் கருதுகிறது.
தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டுமெனில் சமயசார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் முழு மனதுடன் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும். தங்களுக்கிடையில் நிலவும் வேறுபாடுகளையும், தனிப்பட்ட நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு நாடாளும் தேசிய ஜனநாயக முன்னணிக்கு மாற்றான அரசியல் சக்தியை உருவாக்குவது காலத்தின் கட்டாய மாகும். இத்தகைய இயக்கத்திற்கு இந்திய முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு ஆதரிக்கும் என்பதில் ஐயமில்லை.
தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் சங்பரிவாரங்களின் போக்குகளை தடுத்து நிறுத்தி தேசத்தின் பாரம்பரிய பண்பாடுகளையும், மாண்புகளையும் பாதுகாப்பதற்கு சமயச்சார்பற்ற அரசியல் சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரளுமாறு இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
மிஸ்ரா குழு பரிந்துரைப் படி இடஒதுக்கீடு:
மத்திய அரசின் திட்டங்கள் வளர்ச்சியை குறிக்கோளாகவும், அந்த வளர்ச்சி எல்லா பகுதியினருக்கும் சமமான - முழுமையான வளர்ச்சியாகவும் அமையுமாறும் இருக்க வேண்டும். பிற்பட்டோரும், ஏழை - எளிய மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் வளர்ச்சித் திட்டங்களால் பயன்பெறுவது அபூர்வமானதாகவே அமைந்திருக்கிறது.
தேசத்தில் வெளிவரும் எல்லா புள்ளி விவரங்களும் தேசிய அளவிலான எல்லாவித கமிஷன்களின் அறிக்கைகளும் பிற்படுத்தப்பட்ட சாதாரண ஏழை எளிய மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடும் வகையில் இல்லை என்பதையே தெரிவித்து வருகின்றன.
டாக்டர் கோபால்சிங் உயர்மட்ட குழு அறிக்கை மண்டல் கமிஷன், சச்சார் கமிட்டி, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள் தரும் உண்மை எதுவெனில், பிற்பட்ட மக்களின் பிற்போக்கான நிலை மேலும் பிற்போக்கடைந்திருக்கிறது என்பதுதான். சிறப்பு வளர்ச்சித் திட்டங்களையும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கித் திட்டம் என்றும் தாஜா செய்யும் திட்டம் என்றும் மத்திய அரசு வர்ணிப்பதால் நிலைமை இன்னும் மோசமாகிறது.
தேசிய மைனாரிட்டியான முஸ்லிம் சமுதாயத்திற்குரிய நீதியை சிறப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீட்டை பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கென அரசு வேலைவாய்ப்பிலும், உயர்கல்வி யிலும் உரிய இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த கோரிக்கையை ஏற்று அமுல்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் நடவடிக்கைகளில் ஏமாற்றம்:
தேசத்தில் ஏழ்மையை போக்குவதாக கூறி தேசிய ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிக்கக் கூடியவைகளாக உள்ளன. பொருளாதார முன்னேற்றம் பற்றி அதிகம் பேசப்படுகிறதே தவிர, ஏழ்மையை போக்குவதிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் மத்திய அரசின் உண்மையான திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஏழை தொழிலாளிகளும், சாமானிய மக்களும் மோடி அரசால் பயன் எதுவும் அடைந்ததாக தெரியவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கும், உணவு பாதுகாப்புக்கும் வகுத் துத் தந்துள்ள பயன்மிகுந்த திட்டங்களை மத்திய அரசு கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
காவிமயமாகும் கல்வி:
இந்தியாவின் கல்விக் கொள்கையில் காலத்திற்கேற்ற மாற்றங்களையும், திருத்தங்களையும் ஏற்படுத்தும் வகையில் பாரம்பரியமிக்க ஜனநாயக சமயசார்பற்ற மக்களாட்சி கொள்கையிலேயே மாற்றம் செய்து விடும் நோக்கத்தில் மத்திய அரசு கல்விக் கொள்கையில் தலையிட்டு வருவதை இக்கூட்டம் மிகுந்த வேதனையோடு நோக்குகிறது.
தேசத்தில் வளமும், அமைதியும், சகவாழ்வும் எல்லா தரப்பு மக்களுக்கிடையிலும் நிலவுவதை வலியுறுத்துவதுதான் இந்த தேசத்தின் விழுமிய மரபுகளாகும். அந்த மரபுகளை பேணி பாதுகாப்பதை தவறான தகவல்கள் மூலமும், பொய்ப் பிரச்சாரங்கள் மூலமும் தவிர்த்திட முடியாது - கூடாது.
பாடப் புத்தகங்களில் வகுப்புவாத, வகுப்பு துவேஷ கருத்துக்களை திணிப்பதற்கான முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்
தொடரும் வகுப்புக் கலவரங்கள்:
மத்திய அரசும், மாநில அரசுகளும் அண்மைக் காலத் தில் தலைதூக்கி வரும் வகுப்பு வன்முறை சம்பவங்களை ஒடுக்கும் வகையில் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகியும் கூட வகுப்புக் கலவரங்கள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது பெருத்த வேதனை தரும் செய்தியாகும். சமீபத்தில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்வங்கள் முழு தேசத்தையும் குலுக்கியுள்ளன.
லவ் ஜிஹாத், மத மாற்றம் என்னும் புனைந்துரைகளை வேண்டுமென்றே பிரச்சாரம் செய்து வகுப்பு மோதல்களுக்கு வழி வகுக்கும் சங்பரிவாரங் களின் மோசமான நடவடிக்கைகளை இக்கூட்டம் மிகுந்த கவலையுடன் சுட்டிக் காட்டுகிறது. அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பெரும்பான்மை சமுதாய மக்களின் வகுப்பு உணர்வுகளை கிளறிவிட்டு, வாக்கு வங்கி அரசியலை நடத்த எத்தனிப்பதும் இதற்கு ஆளும் கட்சி துணைபோவதும் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகிறது என்பதை இக்கூட்டம் பிரகடனப்படுத்துகிறது.
டெல்லி சட்டசபைக்கு மறுதேர்தல்:
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைநகர் டெல்லி பிரதேசத்தில் முறையாக தேர்தல் நடந்திருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு பதவியை விலை பேசி குதிரை வியாபாரத்தில் மூழ்கி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கி தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றுவதன் மூலம் ஜனநாயக மாண்புகளை அவமதித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை அறிய இக்கூட்டம் மிகுந்த வேதனை அடைகிறது.
பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை காக்கும் வகையிலும் டெல்லி பிரதேச மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் இந்திய குடியரசுத் தலைவர் தலையிட்டு டெல்லி பிரதேச சட்டப்பேரவையை கலைத்து புதிதாக தேர்தல் நடத்தும் அறிவிப்பை விரைவாக வெளியிடுமாறு இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
காஷ்மீர் நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் பேரிடர் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பெரும் பாதகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தேவைப்பட்ட உதவிகளை அளித்து நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இந்திய ராணுவத்தினர் பாராட்டுக்குரிய வகையில் வெள்ளப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இன்னும் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள் மலையளவு குவிந்திருக்கிறது.
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூ.25 லட்சம் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக பாரதப் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்புவது என்று இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.
தேச மக்கள் எல்லோரும் தம்மால் இயன்ற உதவிகளை பிரதமர் நிவாரண நிதியாக அனுப்பி காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு உதவுமாறு இக் கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
கேரள மதுவிலக்கு கொள்கைக்கு வரவேற்பு:
கேரள மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்களும், அவரின் அமைச்சரவையினரும் மிகவும் துணிச்சல் மிக்க முடிவின் மூலம் 10 ஆண்டு காலத்திற்குள் அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுலுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த துவங்கியுள்ளதை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டி கேரள மாநில அரசு தனது அருமையான லட்சியப் பயணத்தில் முழு வெற்றிபெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று இக்கூட்டம் வாழ்த்துகிறது.
`பைத்துர் ரஹ்மா’ திட்டத்தை பரவலாக்குவோம்:
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த மாநிலத்தில் வாழும் பல்வேறு சாதி, சமயங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக `பைத்துர் ரஹ்மா’ என்னும் நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டி வழங்கி வருகிறது.
சி.ஹெச். முஹம்மது கோயா மருத்துவ சேவை மையம் அமைத்து, சாமானிய மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் ஆழ்கிணறுகள் தோண்டி குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறது. இத்தகைய முன்னுதாரணமான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் கேரள லீகுக்கு அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடில்லாமல் மனதார பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கேரள மாநில முஸ்லிம் லீகின் இந்த அற்புதமான - அனைவரின் இதயங்கவர்ந் துள்ள சேவைகளை இந்த தேசிய செயற்குழு வரவேற்று வாழ்த்து வதோடு மற்ற மாநில லீகுகளுக்கு கேரள லீகு மக்கள் சேவை செய்வதிலும் முன்னு தாரணமாக திகழ்வதை பாராட்டுகிறது.
இ.யூ. முஸ்லிம் லீக் சட்டதிட்டங்களுக்கு துணை விதிகள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு மாநிலமும் அதன் அமைப்பு வசதிக்காக துணை விதிமுறைகளை வகுத்து செயல்படலாம் என்ற விதிக்கு ஏற்ப கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் சமர்ப்பித்த அமைப்பு துணை விதிமுறைகளுக்கு இந்த கூட்டம் அங்கீகாரம் வழங்குகிறது.
பிற மாநில லீகுகளும் தத்தமக்கு தேவைப்பட்ட துணை விதிமுறைகளை வகுத்து தொகுத்து தேசிய செயற்குழுவின் அங்கீகாரத்துக்கு வரும் டிசம்பர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்துகொண்டோர்:
தேசிய துணைத் தலைவர் கள் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது, கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்றாஹீம் ஆகா, தேசியச் செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ் ஸமது ஸமதானி எம்.எல்.ஏ., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், மேற்கு வங்கம் ஷாஹின்ஷா ஜஹாங்கீர்,
துணைச் செயலாளர்கள் நாக்பூர் சமீம் சாதிக், லக்னோ டாக்டர் மத்தீன்கான், பெங்களூரு சிராஜ் இப்றாஹீம் சேட், ஆம்பூர் எச். அப்துல் பாஸித், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெய்ப்பூர் சர்புதீன் அன்சாரி,
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர்கள் டாக்டர் எம்.கே. முனீர்கோயா, வி.கே. இப்றாஹீம் குஞ்சு, மஞ்சலம்குழி அலி, முன்னாள் அமைச்சர்கள் பி.கே.கே. பாவா, சி.டி. அஹமது அலி, நாலகத் சூஃபி, செர்கலம் அப்துல்லாஹ், குட்டி அஹமது குட்டி, மூத்த தலைவர் ஹமீத் அலி ஷாம்நாத், பி.வி. அப்துல் வஹாப்,
சட்டமன்ற உறுப்பினர்கள் அஹமது கபீர், கே.என்.காதர், அப்துல் ரஸாக், நெல்லிக் குன்னு, சி.மம்முட்டி, கே.எம். ஷாஜி, சி. மொயீன் குட்டி, வி.எம். உமர் மாஸ்டர், அட்வகேட் எம். உமர், அப்துர் ரஹ்மான் ரண்டத் தானீ, முஹம்மது உன்னி ஹாஜி, இ.கே. பஷீர், அட்வகேட் சம்சுதீன், வி.உபைதுல்லாஹ்,
கர்நாடக இனாம்தார், மகாராஷ்டிரா சமியுல்லாஹ் அன்சாரி, பீகார் அக்தர் உசேன், மத்தியப் பிரதேசம் ஷாஜித் அலி, ஜார்க்கண்ட் அம்ஜத் அலி, ராஜஸ்தான் சமீம் அஹமது, ஆந்திரா காலித் ஜுபைதி, கோவா ஷேக் வசீம், பஞ்சாப் மஹ்மூது அஹமது திந்த், அஸ்ஸாம் கஸீருத்தீன் ஷேக் ஆகிய - மாநிலங்களின் தலைவர்கள்,
தமிழ்நாடு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், கேரளா கே.பி. அப்துல் மஜீத், கர்நாடகா ஷமீலா அன்சாரி, மகாராஷ்டிரா ஹபீப் கான், ஜார்க்கண்ட் முஹம்மது ஷாஜித் ஆலம், ஆந்திரா செய்யது ஆஸம் மொய்னுதீன், குஜராத் ஷேக் வாஸிம், மத்தியப் பிரதேசம் நயீம் அக்தர், அஸ்ஸாம் முஃப்தி அப்துல் மத்தீன் உஸ்மானீ ஆகிய - மாநிலங்களின் பொதுச் செயலாளர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் லியாகத் அலி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காணஇங்கே சொடுக்குக! |