காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இம்மாதம் 18ஆம் நாளன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நாளான செப்டம்பர் 18, அதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 17 ஆகிய இரு நாட்களில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, இன்று 17.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் வாக்குப் பதிவு 18.09.2014 அன்று நடைபெறுகிறது.
தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடியும் வரை, வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இம்மாவட்டத்தில் இருக்கக் கூடாது.
10ஆம், 12ஆம் வகுப்பு பயில்வோருக்கு,
தேர்தலுக்கு முந்தைய நாளான செப்டம்பர் 17 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் அக்டோபர் 07ஆம் நாளன்றும்,
தேர்தல் நாளான செப்டம்பர் 18 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் அக்டோபர் 08ஆம் நாளன்றும் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை, செப்டம்பர் 22ஆம் நாளன்று நடைபெறும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்றிலிருந்து தேர்தல் முடியும் நாள் வரையிலும், வாக்கு எண்ணுமிடத்தில் - வாக்கு எண்ணப்படும் நாளன்றும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் நடைபெறும் அந்தந்தப் பகுதிகளில் வாக்குரிமை பெற்றோர் வாக்களிக்க வசதியாக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையளிக்கப்பட வேண்டும்.
வாக்காளர் அடையாளச் சீட்டுகள் நாளை (செப்டம்பர் 17) மதியத்திற்குள் வினியோகித்து முடிக்கப்பட்டுவிடும். வாக்குப்பதிவின்போது அதைக் கொண்டு வருவோர் வேறு ஆவணங்களைக் காண்பிக்க வேண்டியதில்லை. வாக்காளர் அடையாளச் சீட்டு கொண்டு வராதோர், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 16 அடையாள ஆவணங்களுள் ஒன்றைக் காண்பித்து தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
வாக்களிக்கத் தகுதியான ஒருவர் கூட தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட தேர்தல் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரும்பத்தகாத எந்த நிகழ்வுகளும் நடைபெறாவண்ணம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றிட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |