காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் நாளை (செப்டம்பர் 18) அன்று நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் - ம.அமலக்கனி என்பவர், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி சார்பாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து - சுயேட்சையாக, கோமான் ஜமாஅத் சார்பாக, அரிக்கேன் விளக்கு சின்னத்தில், எஸ்.ஐ.அஸ்ரஃப் என்பவர் போட்டியிடுகிறார்.
கோமான் ஜமாஅத் சார்பாக போட்டியிடும் எஸ்.ஐ.அஸ்ரஃபுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்ற 31/08/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் கூட்டத்தில், வருகின்ற 18/09/2014 வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்ற 1 ஆவது வார்டு இடைத் தேர்தலில், கோமான் ஜமாஅத் வேட்பாளராக ஜனாப் எஸ்.ஐ.அஸ்ரஃப் அவர்களை ஏகமனதாக தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து மேற்படி ஜமாஅத்திற்கு பேரவையால் 04/09/2014 அன்று பாராட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோமான் ஜமாஅத்தார்கள் நன்றி தெரிவித்தும், ஆதரவு வேண்டியும் பேரவைக்கு 10/09/2014 கடிதம் அனுப்பி இருந்தார்கள்.
மேற்படி கோமான் ஜமாஅத்தார்களின் பொது வேட்பாளர் ஜனாப் எஸ்.ஐ.அஸ்ரஃப் அவர்கள் இன்ஷா அல்லாஹ் அமோக வெற்றி பெறுவதற்கு, 17/09/2014 ஆதரவு தெரிவித்து, பேரவையால் கடிதம் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.எஸ்.எம்.சொளுக்கு முஹம்மது இஸ்மாயில் (முத்துஹாஜி),
ஒருங்கிணைப்பாளர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை. |