காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி. மருத்துவமனை அருகில் இன்று 13.00 மணியளவில், தனியார் பள்ளி வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் பலியானார். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
அடைக்கலபுரத்தைச் சேர்ந்த சூசைநாதன் என்பவரது மகன் ஜிப்ஸன் (வயது 38). அடைக்கலபுரம் ஜோஸப் மேனிலைப்பள்ளியில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் தாஸ் என்பவரது மகன் ராஜா (வயது 20).
இவ்விருவரும், காயல்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் சாலை வழியே திருச்செந்தூரை நோக்கி, ‘ஹீரோ ஹோன்டா ஸ்ப்ளெண்டர்’ வாகனத்தில் பயணித்துச் சென்றுள்ளனர். ஜிப்ஸன் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
கே.எம்.டி. மருத்துவமனை நுழைவாயில் அருகே சென்றபோது, எதிரில் வந்த - காயல்பட்டினம் தனியார் பள்ளி வாகனம் திடீரென வலது புறத்தில் திரும்புகையில், பள்ளி வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், ஜிப்ஸன் இரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பலியானார். உடன் சென்ற ராஜாவுக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.
தகவலறிந்ததும், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் நிகழ்விடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்திற்குள்ளான வாகனங்களை ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்த அவர்கள், இறந்த ஜிப்ஸனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இறந்த ஜிப்ஸனின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அடிக்கடி விபத்து நிகழும் இப்பகுதியில், போதிய போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.
படங்கள்:
நியாஸ்
மற்றும்
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
[சிறு திருத்ததம் செய்யப்பட்டது @ 23:09 / 17.09.2014] |