தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைப் பூர்விகமாக கொண்ட - ஹாஜி செய்யத் காசீம் மரைக்காயரின் இளைய மகனும், புகழ்பெற்ற தொழிலதிபருமான ஹாஜி எஸ்.சி.எம்.ஜமாலுத்தீன் இன்று (செப்டம்பர் 17) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னாரின் ஜனாஸா, நாளை (செப்டம்பர் 18) மதியம் 12.30 மணியளவில், சென்னை புதுக்கல்லூரி பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, மதியம் 01.00 மணியளவில், சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெருமதிப்பிற்குரிய தொழிலதிபரும் - சமுதாயப் புரவலருமான ஹாஜி எஸ்.சி.எம்.ஜமாலுத்தீன் அவர்கள், இன்று நம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
நம் சமூகத்தில் பல்வேறு பெரிய பொறுப்புகளையெல்லாம் ஏற்று, இறையருளால் செவ்வனே செயல்பட்ட நல்லவர். சிறந்த பண்பாளர்.
முஸ்லிம் சமுதாயத்தில் எண்ணிலடங்கா இளைஞர்கள் தம் வாழ்வை ஒளிமயமாக்கிக்கொள்ள முழுமுதற்காரணியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
நமது எல்.கே.மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியரான நான், இப்பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்படுவதற்கு இப்பெருந்தகையின் விலைமதிக்க முடியாத பரிந்துரையே காரணம். என்னைப் போல, எம் பள்ளியின் சக ஆசிரியர்களான ஜனாப் ரஊஃப், ஜனாப் சித்தீக், ஜனாப் முஹம்மத் முஹ்யித்தீன், ஜனாப் ஞானியார் ஆகியோரும் இப்பள்ளியின் ஆசிரியர்களாகப் பணியாற்றிட அவர்களின் மகத்தான பரிந்துரையே காரணம்.
அன்னாரின் பிரிவு, நம் சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, அன்னாரின் வஃபாத்திற்காக நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம்.
பெருந்தகை அவர்களின் பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் தன் மகத்தான கிருபையால் பொறுத்தருளி, அன்னார் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நற்கருமங்களையும் கபூல் செய்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீன் ஆகியோருடன் ஒன்றாக அமரச் செய்வானாக...
பெருந்தகை அவர்களின் பிரிவால் மீளாத் துயரிலிருக்கும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும், எமதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |