ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், கடந்த ரமழான் மாதத்தில் அபூதபீயில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில் வென்ற காயலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், நவம்பர் 07 அன்று மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செய்தித்துறைப் பொறுப்பாளர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 24ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில், மன்ற துணைத்தலைவர் மக்பூல் அஹ்மத் - செயற்குழு உறுப்பினர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ,இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்குப் பாராட்டு:
கடந்த ரமழான் மாதத்தில் இந்திய சமூக - கலாச்சார மையம் மற்றும் அபூதபீ அவ்காஃப் இணைந்து நடத்திய - உலகளாவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற - அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீயின் சாதனையைப் பாராட்டி, இக்கூட்டத்தில் துஆ செய்யப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த (5ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் நவம்பர் மாதம் 07ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நடத்திடவும், நிகழ்விடம் குறித்து முடிவு செய்யப்பட்ட பின்னர், அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் செய்தி வெளியிடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தாயக பொதுப் பிரச்சினைகள் - ஓர் அலசல்:
தமது விடுமுறையில் - அண்மையில் தாயகம் சென்று வந்த மன்ற உறுப்பினர்கள், நகரில் சந்தித்த பொதுவான பிரச்சினைகள், நகரின் குறைபாடுகள், தேவைகள் குறித்து விளக்க, அவற்றின் அடிப்படையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம், வரும் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின் நடைபெறும் என மன்றத் தலைவர் அறிவிக்க, பொருளாளர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீயின் துஆவைத் தொடர்ந்து, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |