காயல்பட்டினம் சொளுக்கார் தெரு - மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் 27ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 12ஆவது பட்டமளிப்பு விழா ஆகியன இம்மாதம் 13, 14 (சனி, ஞாயிறு) நாட்களில் நடைபெற்றன.
முதல் நாள் நிகழ்ச்சிகள் (பெண்கள் நிகழ்ச்சி):
முதல் அமர்வு:
இம்மாதம் 13ஆம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற்ற முழு நாள் நிகழ்ச்சிகளும், 14ஆம் நாள் நண்பகல் வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளும் மகளிர் நிகழ்ச்சியாக, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் உள் வளாகத்தில் நடைபெற்றது.
முதல் நாளன்று 09.30 மணிக்கு முதல் அமர்வு துவங்கியது. ஹாஜ்ஜா எம்.மர்யம் ரஜீனா தலைமை தாங்கினார். எம்.எஸ்.ஆயிஷா ஹம்தூன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழா ஏ.ஜெ.ஃபாத்திமா முஇஸ்ஸா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கே.எஸ்.சாமு ஃபாத்திமா முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார். காணிக்கை நிகழ்ச்சி மற்றும் மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. 13.00 மணியுடன் இவ்வமர்வு நிறைவுற்றது.
இரண்டாம் அமர்வு:
அதே நாள் மாலையில் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. 16.30 மணிக்குத் துவங்கிய இவ்வமர்விற்கு ஹாஜ்ஜா எஸ்.ஏ.கே.செய்யித் ராபிஆ தலைமை தாங்கினார். மிஃப்தஹுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியை எம்.நஜ்முன்னிஸா முஅஸ்கரிய்யா இவ்வமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
எம்.ஏ.எஸ்.முத்து கதீஜா முஅஸ்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஏ.ஆர்.நுஸைபா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழா எஸ்.ஓ.எஃப்.செய்யித் ராபிஆ வரவேற்புரையாற்றினார்.
மாணவியர் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, “விவாக விலக்கிற்கு முக்கிய காரணம் பணக்குறையே! மனக்குறையே!!” எனும் தலைப்பில் அரிவையர் அரங்கம் நடைபெற்றது. ஹாஃபிழா எஸ்.எச்.உம்மு ஹபீபா இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். மஃரிப் வேளை நெருங்குகையில் இவ்வமர்வு நிறைவுற்றது.
மூன்றாம் அமர்வு:
அதே நாளில் 19.00 மணிக்குத் துவங்கிய மூன்றாம் அமர்வை, எஸ்.என்.செய்யித் இஸ்மாஈல் நாச்சி முஅஸ்கரிய்யா நெறிப்படுத்தினார். கல்லூரி மாணவியரின் இன்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியையர் பங்கேற்ற - “சித்தாந்த சீரழிவுகளுக்கு சீரமைப்பு” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
தொடர்ந்து, “முஅஸ்கர் மீள்பார்வை” எனும் தலைப்பில் ஹாஜ்ஜா எம்.ஐ.கதீஜத்துல் குப்றா முஅஸ்கரிய்யா உரையாற்றினார். தொடர்ந்து, கல்லூரி மாணவியர் பங்கேற்ற - நபிகளார் புகழ் பாடும் நஃத் ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கல்லூரியில் பயின்று தேர்வுகளிலும், போட்டிகளிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியருக்கு, ஹாஜ்ஜா எம்.கே.டீ.சுபைதா பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சியை ஹாஜ்ஜா நஹ்வீ எம்.எம்.முஹம்மத் ஆமினா முறைப்படுத்தினார். ஏ.எம்.ஜம்ஜம் ஆயிஷா நன்றி கூற, துஆ ஸலவாத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் (பெண்கள் நிகழ்ச்சி):
நான்காம் அமர்வு:
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இம்மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 09.30 மணிக்குத் துவங்கின. ஹாஜ்ஜா வாவு எம்.எஸ்.குர்ரத் தலைமை தாங்கினார். எம்.எஸ்.முத்து ஃபாத்திமா முஅஸ்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எம்.ஏ,வஜீஹா யாஸ்மின் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜ்ஜா குளம் எஸ்.எச்.உம்மு ரஷீதா முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து காணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பகுதி நேர மாணவியருக்கான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி நடைபெற்றது. மாணவியர் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ‘அறிவுச் சுரங்கம்’ என்ற தலைப்பிலான பல்சுவை சிறப்பு நிகழ்ச்சியை ஹாஜ்ஜா எம்.மைமூன் கதீஜா முஅஸ்கரிய்யா, ஹாஜ்ஜா எம்.என்.நளீஃபா முஅஸ்கரிய்யா ஆகியோர் நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஹாஜ்ஜா எம்.எல்.சதக்கு ஹபீபா (எஸ்.கே.), ஹாஜ்ஜா எம்.பி.ஏ.ஃபவ்ஸிய்யா ஆகியோர் சாதனை மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். ஹாஜ்ஜா குளம் ஹாஜராவின் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் மகளிர் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் (ஆண்கள் நிகழ்ச்சி):
ஐந்தாம் அமர்வு:
அன்று 17.00 மணியளவில் ஆண்கள் நிகழ்ச்சி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வெளி மேடையில் துவங்கியது.
மாணவர் பி.ஏ.முஹம்மத் ஃபைஸல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் வரவேற்புரையாற்றினார்.
இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தலைமையுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தொகுத்தெழுதிய மார்க்க வினா-விடை நூலை அவரே வெளியிட்டு, நூல் அறிமுகவுரையாற்றினார். ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி தை.மு.க.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஆறாம் அமர்வு (பட்டமளிப்பு விழா):
அன்று 19.00 மணியளவில் துவங்கிய பட்டமளிப்பு விழா அமர்வு, ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் உதுமானின் இஸ்லாமிய பாடலுடன் துவங்கியது. மாணவர் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மவ்லவீ யு.ஸலீம் ஸிராஜீ, மஹ்ழரா மற்றும் முஅஸ்கர் அரபிக்கல்லூரிகளின் பேராசிரியர் மவ்லவீ கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, சென்னை தாருல் உலூம் ஜமாலிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அஹ்மத் ஜலாலுத்தீன் ஃபாஸீ ரஷாதீ நத்வீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிங்கை கா.ந.மன்றத்தின் - ஹாஃபிழ்களுக்கான ஊக்கப்பரிசு:
காயல்பட்டினத்திலுள்ள திருக்குர்ஆன் மனனம் பயிற்றுவிக்கும் மத்ரஸாக்களில் பயின்று, ஹாஃபிழ் - ஹாஃபிழா ஸனது பெறும் மாணவ-மாணவியருக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 2 ஆயிரத்து 500 பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறித்து, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசியதைத் தொடர்ந்து, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் - ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெறும் 9 மாணவியருக்கு - தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 என்ற விகிதத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு அடங்கிய உறைகளை, கல்லூரியின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயிடம் கையளித்தார்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) வாழ்க்கைச் சரித குறுந்தகடு வெளியீடு:
சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை உள்ளடக்கி, மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆற்றிய உரைகள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் முதற்பிரதியை வெளியிட, ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத் அதனைப் பெற்றுக்கொண்டார்.
“நாயக நறுமலர்கள் வரலாறு” எனும் தலைப்பில் - நபிகளாரின் மனைவியர் வாழ்க்கைச் சரிதங்களை உள்ளடக்கிய உரைகள் அடங்கிய குறுந்தகடை ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் வெளியிட, கீழக்கரையைச் சேர்ந்த பிரமுகர் ஹாஜி குத்புத்தீன் ராஜா அதனைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விரு குறுந்தகடுகள் பற்றிய அறிமுகவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆற்றினார்.
அரங்கப் பெயர்க்காரணியர் அறிமுகம்:
பட்டமளிப்பு விழா மேடை, “அல்ஹாஜ்ஜா தை.மு.க.ஜெய்னம்பு தாஹா நினைவு அரங்கம்” எனும் பெயரில் அமைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்த விளக்கவுரையை, நிறைவு நாள் ஆண்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நெறிப்படுத்திய - ‘அல் அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ ஆற்றினார்.
பட்டமளிப்பு:
தொடர்ந்து பட்டமளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ பட்டம் பெற்ற மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார்.
காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ ஸனது - பட்டச் சான்றிதழ் விளக்கவுரையாற்றினார்.
கல்லூரியின் ஆண்டறிக்கை குறித்து சுருக்க உரையாற்றி, கல்லூரியின் 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்து, ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெறும் 29 மாணவியர், கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் கீழ் பயின்று, முழுமையாக மனனம் செய்து முடித்து - ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெறும் 9 மாணவியர் ஆகியோரின் பெயர் பட்டியலை, கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாசிக்க, ஹாஜ்ஜா எம்.டீ.ஸாரா உம்மாள், ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி, ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.ஏ.செய்யித் ராபியா ஆகியோர் பெண்கள் பகுதியில் மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
பட்டம் பெற்ற மாணவியர் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆ இறைஞ்ச, அனைவரும் எழுந்து நின்றவாறு ஸலாம் பைத் பாடிய பின் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
பங்கேற்றோர்:
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், ஆண்கள் - பெண்கள் அரபிக்கல்லூரிகள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும், நகரப் பிரமுகர்களும, பட்டம் பெற்ற மாணவியரின் உறவினர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் வெள்ளி விழா, மாணவியர் விடுதி திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |