சஊதி அரபிய்யா தலைநகர் ரியாதில் இயங்கி வரும் International Indian School Riyadh (IISR) - சர்வதேச இந்தியப் பள்ளியின் நிர்வாகத் தலைவராக, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த எஸ்.ஹைதர் அலீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விபரம் வருமாறு:-
சவூதி அரபிய்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மேற்பார்வையில், இந்தியத் தூதரை புரவலராகக் (Patron) கொண்டு - அந்நாட்டின் ரியாத், ஜித்தா, தம்மாம் உள்ளிட்ட பெருநகரங்களில் பத்து சர்வதேச இந்தியப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியும் தனது நிர்வாகத்தில் ஏழு பெற்றோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆட்சி மன்றக்குழுவை ஏற்படுத்தியுள்ளது. சஊதி அரபிய்ய அரசின் கல்வித்துறை மற்றும் இந்தியத் தூதரகத்தின் மேற்பார்வையில் பெற்றோர்களால் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் இந்த நிர்வாகக் குழு தேர்ந்தடுக்கப்பட்டு, பொறுப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மன்றக்குழுவின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
ரியாதிலுள்ள சர்வதேச இந்தியப் பள்ளிக்கு, சென்ற ஆண்டு நடந்த தேர்தலில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த எஸ்.ஹைதர் அலீ (48) தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளியின் கல்விக்குழு பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார்.
12 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட இப்பள்ளி, ஆண், பெண் மாணவ-மாணவியருக்கென்று தனித்தனியாக வளாகங்களைக் கொண்டுள்ளது.
ஆட்சி மன்றக்குழுத் தலைவருடைய (Chairman) பதவிக் காலம் ஓராண்டு என்ற நிலையில், இம்மாதம் 02ஆம் நாளன்று நடந்த ஆட்சிமன்ற உறுப்பினர்களின் நிர்வாகக் கூட்டத்தில், இந்தியத் தூதரகப் பொறுப்பாளர் முன்னிலையில், எஸ்.ஹைதர் அலீ - பள்ளியின் நிர்வாகத் தலைவராக, ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ரியாத்தில் தமிழர்களுக்கிடையில் சமூகச் சேவையாற்றி வரும் தஃபர்ரஜ் அமைப்பின் நடப்பு துணைத் தலைவரும், ரியாத் ஐக்கியத் தமிழ்ப் பேரவையின் செயலாளரும், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமாவார்.
ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளியின் தலைவராக, தமிழர் ஒருவர் இரண்டாவது முறையாக ஒரு தமிழர் தேர்வு பெற்றதில் ரியாத்வாழ் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி: இந்நேரம்.காம்
தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் |