புதிதாக வெளிவந்துள்ள கடலோர பகுதி மேலாண்மை திட்ட வரைப்படத்தில் (COASTAL ZONE MANAGEMENT PLAN), திருச்செந்தூர் தாலுகா - காயல்பட்டினம், புன்னக்காயல் வட்டாரத்தில் அமைந்துள்ள கொட்டமடைக்காடு இடம்பெறாதது குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) புகார் மனுக்களை அரசு துறைகளிடம் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக, அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம், புன்னக்காயல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கொட்டமடைக்காடு. காப்புக்காடான இது, இப்பகுதிகளில் அனைவராலும் அறியப்பட்ட
ஒன்றாகும். இக்காடு குறித்த விபரங்களை - தமிழக அரசின் நில அளவை துறை வெளியிட்டுள்ள இப்பகுதிகளுக்கான கிராம வரைப்படங்கள் (VILLAGE MAPS) தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, தமிழக அரசின் சுற்றுச்சூழல் இயக்ககம் மேற்பார்வையில் வெளிவந்துள்ள கடலோர பகுதி மேலாண்மை திட்ட வரைப்படத்தில்,
கொட்டமடைக்காடு குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை. கிராம வரைப்படங்கள் - காடாக அடையாளம் காணும் சில இடங்கள், உப்பளங்களாக,
குறியிடப்பட்டுள்ளன.
1986ம் ஆண்டுக்கு பிறகு தயார் செய்யப்பட்ட கிராம வரைப்படத்தில் உள்ள தகவல் கூட, CZMP வரைப்படத்தில் இடம்பெறாமல் இருப்பதும், அதற்கு
மாற்றான தகவல் இருப்பதும் சில கேள்விகளை எழுப்பியது.
எனவே - இவைகள் குறித்து விசாரிக்க வேண்டி, சென்னையில் - தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் செயலர் திரு ஹன்ஸ் ராஜ் வர்மா IAS
அவர்களையும், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் திரு ஹெச்.மல்லேஸ்ஸப்பா IFS அவர்களையும் நேரடியாக சந்தித்து, KEPA அமைப்பின் செயலாளர்
அப்துல் காதர் நெய்னா - புகார் மனுக்களை, சமீபத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும் - இது குறித்து மனு, மாவட்ட ஆட்சியர் திரு ரவி குமார் IAS
அவர்களிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து - விளக்கம் கேட்டு, சுற்றுச்சூழல் இயக்குனர் - மாவட்ட வன அலுவலருக்கு, கடிதம் அனுப்பியுள்ளார். அதில் - கொட்டமடைக்காடு காப்பு காடு குறித்த விபரங்களை கோரியுள்ளார். மேலும் - இந்த காடு, காப்புக்காடு தகுதியில் இருந்து தரம் குறைக்கப்பட்டிருந்தால், அது சம்பந்தமான அரசாணைகள் / சுற்றறிக்கைகள் ஆகியவற்றையும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலரிடம் கோரப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதிலில், திருச்செந்தூர் தாலுக்காவில், குதிரைமொழி கிராமத்தில், குதிரைமொழித்தேரி என்ற காப்புக்காடு உள்ளது என்றும், கொட்டமடைக்காடு காப்புக்காடு குறித்த விபரங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 11:10 pm / 31.01.2015] |