தூத்துக்குடி மாவட்டத்தில், பிப்ரவரி 01ஆம் நாளன்று (நாளை) டெங்கு ஒழிப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தம் வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் தினமாக 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் டெங்கு கொசுக்களை ஒழித்தல் தொடர்பான தீவிர முனைப்பு நடவடிக்கைகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தப்படாத பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து வைக்க வேண்டும்.
மேற்கண்ட பொருட்களை சேகரிப்பதற்கு என நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சிப் பணியாளர்கள் வீடு தோறும் வந்து மேற்படி பொருட்களை எடுத்துச் செல்ல உள்ளனர். மேலும், குளிர்சாதப் பெட்டியின் பின்புறமுள்ள Defrost Trayஐயும் சுத்தம் செய்ய வேண்டும். சிமெண்ட் தொட்டிகளை கழுவி காயவைத்து ப்ளீச்சிங் பவுடர் போட்டு வைக்க வேண்டும்.
எனவே, 01.02.2015 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றில் குடியிருக்கும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தங்களது வீடுகளை சுத்தம் செய்து கொசு உற்பத்தியை உண்டாக்கும் பொருட்களை அழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவவிடாமல் தடுக்க உரிய ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் பகுதிகளில் இப்பணி மேற்கொள்ள உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |