காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதியில் அமைந்துள்ளது சர்வே எண் 334 இடம். இந்த இடத்தின் மொத்த பரப்பளவு - 4 ஏக்கர், 80 சென்ட்
ஆகும். அரசு ஆவணங்கள் இவ்விடம் முழுவதும் புறம்போக்கு இடம் எனத் தெரிவிக்கின்றன.
1990 களில் இந்நிலம் - பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றில் பெருவாரியானவை - அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பலருக்கு வழங்கப்பட்டதாக
தெரிகிறது. உட்பிரிவுகள் 334/1 (19 சென்ட்), 334/2 (12 சென்ட்), 334/12 (35 சென்ட்) மற்றும் 334/15 (23 சென்ட்) ஆகியவை அரசு வசமே தக்க வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
உட்பிரிவு 334/1 மற்றும் 334/2 இடத்தில் - இப்பகுதி மக்கள் சமுதாய கூடம் கட்டிட கோரிக்கைகளை பல மாதங்களாக அரசிடம் வைத்து வந்துள்ளனர்.
அக்கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் - உட்பிரிவு 334/1 மற்றும் 334/2 இடங்கள், தங்களுக்கு பாத்தியப்பட்டவை என தனியார் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த இடம் சம்பந்தமாக
1996இல் பத்திரப் பதிவுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்னர், இது குறித்து காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தகவல்
தெரிவித்த அந்த தனியார், இந்நிலம் தனியாருக்குடையது என 1965 மற்றும் 1941 ஆகிய ஆண்டுகளின் பத்திரங்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இவ்விடத்தில் பணிகள் செய்ய தனியார் அவ்வப்போது முற்படும் போது பதட்டம் உருவாகுவதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சார்பில் சமீபத்தில்
அங்கு தகவல் பலகை நிறுவப்பட்டுள்ளது. அந்த பலகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:
இந்த இடம், காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் அருணாச்சலபுரம் புல எண் 334/1, 334/2 அரசு நத்தம் குடியிருப்பு காலிமனை. இவ்விடத்தில்
தனி நபர் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி
மாவட்டம்.
காயல்பட்டினம் நகராட்சியில் பயோ காஸ் திட்டம் நிறுவிட பரிசீலனையில் இருந்த பல இடங்களில் இதுவும் ஒன்று. அக்டோபர் 8, 2013இல் காயல்பட்டினம் வந்த மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS, இவ்விடத்தையும் அந்த திட்டத்திற்கு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|