காயல்பட்டினம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திட உதவி செய்யப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
குப்பைக் கூளங்கள் அதிகரித்து, பொலிவிழந்து காணப்படும் நமதூர் கடற்கரையைச் சுத்தப்படுத்த தேவையான உதவிகளை துபை காயல் நல மன்றம் செய்து தரும் என்று கடந்த 23.01.2015 வெள்ளியன்று நடந்த துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜி அவர்கள் தலைமை தாங்கினார். நமதூர் நகரின் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.
மழை வெள்ள நிவாரணம்
கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நமதூரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சேதமடைந்த 15 வீடுகள், குடிசைகள் ஆகியவற்றின் மராமத்துப் பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் மன்றம் உதவி செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்று ஊர் சென்று வந்த மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மகளிர் சுய உதவி வேலைவாய்ப்புத் திட்டம்
சமீபத்தில் ஊர் சென்றிருந்த மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் நமதூர் முன்னாள் சேர்மன் வஹீதா அவர்களைச் சந்தித்து மகளிர் சுய உதவி வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து பேசினார். முந்தைய பங்குக்கான உதவித் தொகையை அரசாங்கம் இன்னும் தரவில்லை. ஆதலால் அதனைப் பெற்ற பின்தான் மன்றத்தின் அடுத்த கட்ட உதவியைப் பெறுவோம் என்று அவர்கள் கூறினர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தீர்மானங்கள்
1. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்களின் மறைவுக்கு இரங்கல்
முஸ்லிம் குடும்பத்தில் கீழக்கரையில் பிறந்து, மிகப் பெரும் சாதனைகளைப் படைத்து சமுதாயத் தூணாக விளங்கிய பெருந்தகை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் மறைவு குறித்து இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காக துஆ செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. துளிர் பள்ளி கூட்ட அரங்கின் ஒலிபெருக்கி
இந்த அரங்கில் பல முக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருவதால், ஒலிபெருக்கி அமைப்பு ஏற்பாடு செய்வதற்கு மன்ற நிர்வாகிகள் ஊருக்கு வந்திருந்தபொழுது துளிர் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தார்கள். இது குறித்து மேற்கொண்டு ஆவன செய்ய தீர்மானிக்கப்பட்டது.
3. துபை காயல் நல மன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான பேரவை
துபை காயல் நல மன்ற உறுப்பினர்களாக இருந்து பின்னர் நிரந்தரமாக ஊருக்குச் சென்று வாழும் முன்னாள் மன்ற உறுப்பினர்களுக்காகவும், இனிமேலும் அவ்வாறு செல்லக்கூடிய மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்ப நலனுக்கு தேவையான உதவிகள் புரிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதற்காகவும் ஒரு பேரவையை ஏற்படுத்தவும், அதற்கான அனைத்து உதவிகளையும் மன்றத்தின் மூலம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
4. கடற்கரையைச் சுத்தப்படுத்துதல்
சமீபத்தில் ஊர் சென்று வந்த மன்ற நிர்வாகிகள் நமதூர் கடற்கரையின் நிலையை கவலையோடு தெரிவித்தனர். குப்பைகள் அதிகம் சேர்ந்து, தூய்மைப் படுத்தப்படாமல் கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதாக அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
நமதூர் கடற்கரையைச் சுத்தம் செய்வதற்கும், அதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கும் மன்றத்தால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மன்றம் தீர்மானித்துள்ளது.
5. பொதுக்குழுக் கூட்டம்
அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் இன்ஷா அல்லாஹ் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய (டிசம்பர் 2014) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |