சஊதி அரபிய்யா - தம்மாம், ரியாத், ஜித்தா நகரங்களில், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க பிரிதிநிதிகள் பங்கேற்பில், அதன் சிறப்பு அறிமுகக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, ஜன்சேவா பயணக் குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
‘ஜன்சேவா கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம்’என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜன்சேவா பிரநிதிகளின் பங்கேற்புடன் தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் துவக்கமாகவும், இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், சஊதி அரபிய்யா நாட்டில் 11.12.2014 அன்று தம்மாம் நகரிலும், 12.12.2014 அன்று ரியாத் நகரிலும், 19.12.2014 அன்று ஜித்தா ஆகிய நகரங்களில் ஆகிய நாட்களில் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து, ஜன்சேவா காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோரடங்கிய - ஜன்சேவா பிரதிநிதிகள் குழு இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.
தம்மாம் காயலர்கள் சார்பில் சிறப்புக் கூட்டம்:
தம்மாம் காயலர்கள் சார்பில், 11.12.2014 அன்று ஜன்சேவா அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முஹம்மத் இம்ரான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அல்ஜுபைல் எஸ்.கே.எஸ். அன் கம்பெனி நிறுவன செயல் இயக்குநர் லால்குடியைச் சேர்ந்த ஷர்ஃபுத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தம்மாம் காயல் நல மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்த அறிமுகத்துடன் தலைமையுரையாற்றினார்.
ஜன்சேவா பிரதிநிதிகள் குழுவின் சார்பில், எஸ்.இப்னு ஸஊத் “ஜன்சேவா ஓர் அறிமுகம்” எனும் தலைப்பிலும், எல்.கே.கே.லெப்பைத்தம்பி “வட்டி ஒரு வன்கொடுமை” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
தம்மாம் காயல் நல மன்றச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் ரஃபீக் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், தம்மாம் வாழ் காயலர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை, மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எம்.இஸ்மாஈல் நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் இடையில் தேனீர் - சிற்றுண்டியும், நிறைவில் அனைவருக்கும் இரவுணவும் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
ரியாத் காயலர்கள், தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்புக் கூட்டம்:
ரியாத் காயலர்கள் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில், 12.12.2014 அன்று ஜன்சேவா அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ், ரியாத் தமிழ்ச் சங்க தலைவர் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, அபுல் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஜன்சேவா பிரதிநிதிகள் குழுவின் சார்பில், எஸ்.இப்னு ஸஊத் “ஜன்சேவா ஓர் அறிமுகம்” எனும் தலைப்பிலும், எல்.கே.கே.லெப்பைத்தம்பி “வட்டி ஒரு வன்கொடுமை” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.
ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் இடையில் தேனீர் - சிற்றுண்டியும், நிறைவில் அனைவருக்கும் இரவுணவும் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
ஜித்தா காயலர்கள் சார்பில் சிறப்புக் கூட்டம்:
ஜித்தா மற்றும் மக்கா வாழ் காயலர்களால், ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவகக் கூட்டரங்கில் 19.12.2014 வெள்ளிக்கிழமையன்று ஜன்சேவா அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் துவங்கிய இந்நிகழ்ச்சியை, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா இறைமறை ஓதினார். எம்.எம்.மூஸா ஸாஹிப் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
"மாபெரும் பாவமான வட்டி நம் சமூகத்தை வெகுவாக பாதித்துள்ளது என்றும், அல்லாஹ் வட்டியை தடுத்து, வியாபாரத்தை அனுமதித்துள்ளதாக சொல்கிறான். ஆனால் நம் சமூகம் பொருளாதாரத் தேவைக்காக அல்லாஹ் தடுத்ததை நாடி நிற்பது வேதனையளிக்கிறதென்றும், அனைத்து சமூக சீர்கேடுகளுக்கும் இந்த வட்டியே காரணமாகிறதென்றும், வட்டியில் சிக்குண்டு வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நம் சமூகத்திற்கு மாற்று வழியாக இவ்வங்கியின் வருகை கண்டிப்பாக மகிழ்ச்சியளிக்கும். சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நம் அன்றாட பண பரிவர்த்தனைகளை இந்த வட்டியில்லா வங்கியின் மூலம் செய்ய நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜன்சேவா ஏன்...?
“ஜன்சேவா ஏன்?” என்ற தலைப்பில், எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார்.
ஜன்சேவாவின் ஆரம்பம்... அது ஏன்... எதற்கு... அதன் பணி என்ன...? மற்ற வங்கிகளிலிருந்து ஜன்சேவா எப்படி வேறுபடுகிறது... அதன் செயல் திட்டம் என்ன... அது இதுவரை சாதித்தது என்ன...? ஆகியன குறித்து விளக்கிப் பேசிய அவர், 2010இல் ஆரம்பிக்கட்ட இந்த வங்கி வட்டியிலிருந்து மனித சமூகத்தை மீட்கும் இலட்சியத்தில் இன்று வரை சிறப்பாக முன்னேறி வருகிறதென்றும், அது தன் உயர்ந்த இலக்கை அடைய தாங்களின் பரந்த பங்களிப்பு ஜன்சேவாவுக்கு அவசியம் தேவையென்றும், சகோதரர்கள் தாராளமாக அதே சமயம் தைரியமாக இந்த அறவழிப் பயணத்தில் இணையலாமென்றும், ஜன்சேவா குறித்த செய்திகளை விளக்கமாக தந்து, வங்கி குறித்த மேலதிக விபரங்களுக்கு தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
வட்டியின் கோரம்...
"வட்டி ஒரு இஸ்லாமிய பார்வை" என்ற தலைப்பில் வட்டியின் விபரீதம் மற்றும் அதை தவிர்ப்பதின் அவசியம் குறித்தும், எல்.கே.கே.லெப்பைத்தம்பி உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
சகோதரர்களிடம் நன்கொடைகள் கேட்டு நாங்கள் வரவில்லை, உங்களை வியாபாரம் செய்ய அழைக்கிறோம். ஆம்..! அல்லாஹ்வோடு வியாபாரம் செய்ய அழைக்கிறோம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் ஒரு கவிஞர். அதுபோன்று நாம் செய்யும் இந்த முதலீட்டில் ஏழைகள் பயன்பெறும்போது, அவர்கள் சந்தோசத்தில் நாம் இறைவனின் அருளை பெறலாம்.
வட்டியில் மூழ்கி வாழ்வை இழந்த மனிதங்கள்தான் எத்தனை... வறுமையின் கோரப் பிடியில் ஈமானிய இழப்பை சந்தித்த உள்ளங்கள்தான் எத்தனை... வட்டியின் கொடூரத்தால் மனித சமூகம் படும் அவலங்கள் சொல்லி மாளாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தோற்றுப் போன மனித திட்டங்கள்...
இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
வட்டியில்லா வங்கியின் அவசியம் தற்கால சமூகத்துக்கு இன்றியமையாத ஒன்று. அவசர உலகத்தில் மனிதனின் தேவையை வட்டியில்லா வங்கியால் மட்டுமே நிவர்த்திக்க முடியும்.
மனிதத்தை மேம்படுத்த போகிறேன் என்று கூவி கேபிடலிசம், கம்யூனிசம், தாராள மயமாக்கல், உலகமயமாக்கல் என்று பல திட்டங்களை மனிதன் இயற்றி, அனைத்திலும் தோற்றுப் போய் விரக்தியில் நிற்கும் உலகம் இதுபோன்று இன்னும் எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும் பொருளாதார வீழ்விலிருந்து உலகை மீட்க முடியாது.
இஸ்லாமின் இச்சிறப்பான வங்கி முறையே உலகை வீழ்ச்சிப் பாதையிலிருந்து தடுக்கும். அதை முன்னெடுக்க ஜன்சேவா என்ற இந்த வங்கி முன்வந்துள்ளது. அதில் பங்கு கொண்டு அதன் பணிகளை ஊக்குவிக்கவேண்டியது நம் யாவரின் பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் காயலர்கள் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வந்திருந்தோர் அனைவருக்கும் ஜித்தா மற்றும் மக்கா காயலர்கள் சார்பாக பிரபு எஸ்.ஜெ.நூருத்தீன் நெய்னா நன்றி கூறினார். துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஐயமும் - தெளிவும்...
தம்மாம், ரியாத், ஜித்தா ஆகிய இம்மூன்று நகரங்களிலும் நடைபெற்ற ஜன்சேவா அறிமுகக் கூட்டங்களில், கலந்துகொண்டோர் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு, அதன் பிரதிநிதிகளான எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் விரிவான விளக்கமளித்துப் பேசினர்.
முதலீடு...
ஜனசேவா என்ற வட்டியில்லா வங்கியின் அவசர - அவசியத்தை உணர்ந்த பார்வையாளர்களுள் சிலர், ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தில் தாமும் முதலீடு செய்வதாக கூட்டம் நடைபெற்ற இடங்களிலேயே உறுதியளித்துள்ளனர். பெரும்பாலானோர் பின்னர் தொடர்புகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஜித்தா தகவல்கள் & படங்கள்:
Y.M.முஹம்மத் ஸாலிஹ்
மூலமாக...
அரபி முஹம்மத் ஷுஅய்ப்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
இச்சுற்றுப் பயணங்களின் தொடர்ச்சியாக, இம்மாதம் 11ஆம் நாளன்று, திருநெல்வேலி – பாளையங்கோட்டை விவி டவர்ஸ் வளாகத்தில் ஜன்சேவா கிளை துவக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜன்சேவா தேசிய தலைவர் முனைவர் ரஹ்மத்துல்லாஹ் இக்கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
ஜன்சேவா பிரதிநிதிகள் குழுவின் இலங்கை, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் குறித்த விபரங்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |