சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம், கடந்த 2014ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ள நகர்நலப் பணிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நகர்நலப் பணிகளுக்காக அந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 19 லட்சத்து 15 ஆயிரத்து 700 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் கடந்த 1994ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம் ரியாத் காயல் நல மன்றம் (RKWA), கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு சமூகப்பணிகளை செவ்வனே ஆற்றி வருகிறது அல்ஹம்துலில்லாஹ்!
வயதுக்கு வந்தும் பொருளாதார வசதியின்றி தவித்த ஏழைக் குமர்களின் திருமண வாழ்விற்காக தங்க நகைகள் வழங்கியும்,
மிகுந்த வறுமையில் வாழ்ந்திட்ட ஏழைகள் பலருக்கு குடியிருக்க வீடு கட்டிக்கொடுத்தும்,
அடுத்தவேளை உணவுக்கு அல்லல்பட்ட வறிய ஆண்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கு சிறு தொழில் நிதியுதவி அளித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தும்,
நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பொருளாதார சிக்கலினால் தவித்த ஏழை மாணவர்களுக்கு அவர்கள்தம் கல்வியினை சிரமமின்றி கற்றுத்தேற கல்விநிதி மற்றும் கல்விக் கடன் வழங்கியும்,
பல்வேறு நோய்களின் கொடுமையில் சிக்கி மருத்துவம் பெறவியலாமல் தவித்த எண்ணற்ற ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவ நிதியுதவி அளித்தும் வந்துள்ளது.
எமது ரியாத் காயல் நல மன்றத்தில் உதவி பெற்ற பலர் ஆசிரியர், ஆசிரியைகளாகவும், அலுவலகத்தில் பணியாற்றியும், சிறுதொழில் செய்து அதன்மூலம் வருமானம் ஈட்டி வருவதையும் காண முடிகிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்,புகழ்ச்சியும்!
2014ஆம் ஆண்டு முதல் கீழ்க்காணும் நலத்திட்டங்கள் இம்மன்றத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது:-
கடந்த 2014ஆம் ஆண்டு 6 செயற்குழுக் கூட்டங்களையும், 2 பொதுக் குழுக் கூட்டங்களையும் நடத்தி, நம் ஊரின் வறியவர்களுக்கு மருத்துவம், கல்வி, சிறுதொழில் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ரூபாய் 19,15,700 உதவி செய்துள்ளது எமது ரியாத் காயல் நல மன்றம். அல்ஹம்துலில்லாஹ்.
இக்ராஃ வுக்கு நிதியுதவி:
உலக காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் 9 மாணவ-மாணவியரின் 3 ஆண்டு பட்டப்படிப்பு செலவுகளுக்கு வருடம் ரூபாய் 5000 வீதம் மூன்றாண்டுகளுக்கு பொறுப்பேற்று, அதன் முதலாண்டு (2014-15) உதவித்தொகையாக (Scholarship) ரூபாய் 45000/-, மேலும் இக்ராஃவின் வருடாந்திர நிர்வாக செலவுக்கு (2014-15ஆம் வருடத்திற்கு) ரூபாய் 50,000 வழங்கி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஷிஃபாவுக்கு நிதியுதவி:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பின் மூலம் பெறப்பட்ட மருத்துவ விண்ணப்பங்களை கருணையுடன் பரிசீலித்து 102 ஏழை-எளிய பயனாளிகளுக்கு ரூபாய் 10,60,525/- நிதி வழங்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் ஷிஃபா அமைப்பின் வருடாந்திர நிர்வாக செலவுக்கு (2014-15ஆம் வருடத்திற்கு) ரூபாய் 20,000/- மற்றும் அவசர வைப்பு நிதிக்காக (Emergency fund ) ரூபாய் 20,000/- வழங்கப்பட்டது.
கல்வி மேம்பாட்டுத் திட்ட நிதி:
>> மேலும் நம் மாணவர்களிடம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான தகுதி மதிப்பெண் (Cut Off) பற்றிய விழிப்புணர்வு எற்படுத்தும் முகமாக பரிசு அறிவித்து நோட்டீஸ் அச்சடித்து ஊரில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளிக் கூடங்களிலும் விநியோகம் செய்யப்பட்டு, இக்ராஃ நடத்திய ''சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை'' நிகழ்ச்சியின் மூலம் அதிக Cut Off Marks பெற்ற 30 மாணவ- மாணவியருக்கு பரிசுத் தொகையாக ரூபாய் 43,925 வழங்கப்பட்டது.
>> கல்வி உதவி கேட்டு நேரடியாக பெறப்பட 13 கடிதங்களுக்கும், ஒரு ஏழை மாணவனின் பொறியில் படிப்பிற்கான வருடம் ரூபாய் 25,000 விதம் 4 வருடங்களுக்கு உதவி செய்வது என முடிவு செய்யப்பட்டது.
>> ஏழை-எளிய மாணவ மாணவிகள் 30 பேருக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் பள்ளிப்பாட நோட்டுகளும் எம் அமைப்பின் காயல் பிரதிநிதி தர்வேஷ் முஹம்மது அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.
சிறுதொழில் நிதியுதவி:
சிறுதொழில் செய்ய வேண்டி நமதூர் வறியவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் தையல் இயந்திரம் (Power machine) , எலெக்ட்ரிக் ஓவன், பால் வியாபாரத்திற்கான குளிர் சாதனப்பெட்டி (Fridge) ஆகியவைகள் உட்பட சிறு தொழில் நிதி உதவிகள் 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இமாம், பிலால் பெருநாள் ஊக்கத் தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் முன்னின்று நடத்திய - நமதூர் பள்ளிவாயில்களில் பணிபுரியும் இமாம் மற்றும் பிலால் ஆகியோருக்கு புனித ரமலான் மாதத்தில் ஊக்கத்தொகை வழங்கியதில் எம் மன்றமும் தன்னுடைய பங்களிப்பை செய்தது.
ரமலான் உணவுப் பொருட்கள் திட்டம்:
முந்தைய இரண்டாண்டுகளைப் போல், 2014ஆம் வருடமும் எம் அமைப்பின் மூலம் நமதூர் ஏழை-எளியோருக்கு புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் தேவையான சமையல் பொருட்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டு, ரூபாய் 2,600 பெருமானமுள்ள சமையல் பொருட்கள் 81 குடும்பங்களுக்கு பிறர் அறியாவண்ணம் வழங்கப்பட்டது.
மாதாந்திர உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம்:
எம் மன்றத்தால் 2014ஆம் வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாதந்திர உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நமதூரில் வசிக்கும் - மிகவும் வறுமை நிலையில் வாழும் - பிறரிடம் கேட்க கூச்சப்படும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வருமானமற்ற வயோதிகர்கள், விதவைகள் என 9 வறிய குடும்பங்களை முதற்கட்டமாக தேர்வு செய்து, அவர்களுக்கு மாதந்தோறும் ருபாய் 1,600 பெருமானமுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஒரு வருடத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழை வெள்ள நிவாரண உதவி:
கடந்த 2014ஆம் வருடம் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமதூரின் அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு வழங்கிட, வெள்ள நிவாரண குழுவிடம் இருந்து உதவி கேட்டு பெறப்பட்ட கடிதத்தை கருணையுடன் உடனே பரிசீலித்து, அன்றைய தினமே ரூபாய் 20,000 ஒதுக்கி எம் மன்றத்தின் காயல் பிரதிநிதி மூலம் அப்பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வனைத்து உதவிகளையும் செய்வதற்கு துணை நின்ற,அருள் புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், புகழ்ச்சியும்! மேலும் இவ்வுதவிகளை செய்வதற்கு தங்களுடைய பங்களிப்பை தந்த எம் மன்றத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், எம் மன்ற அபிமானிகளுக்கும், எம் நல மன்றத்தின் காயல் பிரதிநிதிகள் சகோ. ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும் சகோ. சோனா எம்.எம்.டீ.ஷாஹுல் ஹமீத் ஆகியோருக்கும் எம் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். ஜஸாக்குமுல்லாஹு கைர்.
மேலும் இதுவரை உறுப்பினராக சேர்ந்திராத, புதிதாக பணிக்கு வந்துள்ள ரியாத் காயலர்கள் தயவு செய்து நமது ரியாத் காயல் நல மன்றத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, தங்களது உதவி - ஒத்துழைப்புகளையும் வழங்கி, அமைப்பின் சமூகப்பணிகளுக்கு மேலும் வலு சேர்த்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மக்களுக்கான நமது இந்த உயர்ந்த சேவைகளை முழுமையாக ஏற்று, இதற்காக பொருளாலும், உடலாலும் உதவிடும் அனைவர்களையும் இம்மையிலும், மறுமையிலும் மேன்மையாக்கி வைப்பானாக .ஆமீன்.
இவ்வாறு ரியாத் காயல் நல மன்ற செயலாளர் ஏ.டி.ஸூஃபி இப்ராஹிம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்.
ரியாத் - சஊதி அரபிய்யா.
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டJ @ 22:52 / 30.01.2015] |