காயல்பட்டினம் நகராட்சிக்கான இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் ஆரம்பத்தில் சந்தித்த பிரச்சனைகள், பொன்னன்குறிச்சியில் இத்திட்டத்திற்கு அரசு இடம் 50 சென்ட் தேர்வு செய்யப்பட்ட பின்னணி, நகராட்சியின் பங்கை அரசே வழங்கிட செய்யப்பட்ட முயற்சி, இத்திட்டத்திற்கு முட்டகட்டை போட சிலர் செய்த முயற்சிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
குடிநீர் திட்டம் குறித்த முதல் நகர்மன்றக் கூட்டம்
காயல்பட்டினத்திற்கான இரண்டாம் குடிநீர் திட்டம் குறித்து பல விஷயங்களை மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன்.
இருப்பினும் - அதற்கான சரியான தருணம் அமையவில்லை. தற்போது - அது குறித்து சில நடப்புகளை சொல்ல சரியான தருணம் அமைந்துள்ளது
என நான் நினைக்கிறேன்.
நாங்கள் பதவியேற்று 18 நாட்கள் கழித்து - நவம்பர் 12, 2011 அன்று - முதல் நகர்மன்றக் கூட்டம் அவசர கூட்டமாக நடைபெற்றது. இதில் - ஒரே
ஒரு கூட்டப்பொருள் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. புதிய குடிநீர் திட்டம் குறித்தது. அதில் மூன்று அலுவலக குறிப்புகள்
இடம்பெற்றிருந்தன.
ஒன்று - திருத்தப்பட்ட திட்ட தொகைக்கு ஒப்புதல்,
இரண்டு - நகராட்சியின் 10 சதவீத பங்கை பொது நிதியில் இருந்து வழங்க,
மூன்று - இந்த திட்டத்தை நகராட்சி மூலம் நிறைவேற்ற
முதல் இரண்டு அலுவலக குறிப்புகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
மூன்றாம் கோரிக்கையான - நகராட்சி மூலம் நிறைவேற்றுவதற்கு நான் உடனடியாக சம்மதிக்கவில்லை.
மக்களின் கனவு திட்டம் என்பதாலும், இது குறித்த அனுபவம் நகராட்சிக்கு கிடையாது என்பதாலும், நகராட்சி பொறியியல் துறையில் இருவர்
மட்டுமே இருப்பதாலும் - நான், இந்த திட்டத்தை, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்ற கோரினேன். உறுப்பினர்கள் இதற்கு
சம்மதிக்கவில்லை.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், இந்த முடிவை (நகராட்சி மூலம்
நிறைவேற்றுவதை) மறு பரிசீலனை செய்ய உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தப் பிறகே, மூன்றாவது கோரிக்கைக்கு ஒப்புதல்
கொடுத்தேன்.
எனது தயக்கம் நியாயமானது என்பதை, இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் சந்தித்த பிரச்சனைகள் உறுதி செய்தன.
இறைவன் கிருபையால், பல தடங்கல்களை, சதி திட்டங்களை முறியடித்து தற்போது இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் பலனை, இறைவன் நாடினால், மிக விரைவில், நாம் எல்லோரும் அடைவோம்.
பொன்னன்குறிச்சியில் 50 சென்ட் அரசு இடம் பெற்றது
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான - ஆய்வுகளை மேற்கொண்டு, திட்ட அறிக்கை (DETAILED PROJECT REPORT - DPR) தயார் செய்த நிறுவனம்
WAPCOS ஆகும்.
நான் பதவியேற்று 4 வாரத்தில் சென்னை சென்று, அந்த நிறுவனம் தயாரித்திருந்த ஆவணங்கள் குறித்து சில விளக்கங்கள் பெற்றேன்.
அந்த DPRஇல், பொன்னன்குறிச்சி பகுதியில், ஆற்றோரம் இத்திட்டத்திற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ள இடங்களாக சில தனியார் சர்வே எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
காயல்பட்டினம் திரும்பியதும் - பொன்னன்குறிச்சிக்கு சென்று, அந்த தனியார் நிலங்களின் உரிமையாளர் திரு காசி தேவர் அவர்களை சந்தித்தேன்.
அந்த நிலங்களுக்கு அவர் கூறிய விலை, நகராட்சியால் அதிகாரப்பூர்வமாக வாங்க முடியாது.
நாங்கள் பதவிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகியிருந்ததால், இது குறித்து நகராட்சியில் விசாரித்த போது, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி
வாவு செய்து அப்துர் ரஹ்மான் அவர்கள், பொன்னன்குறிச்சியில் - 50 சென்ட் நிலம் வாங்கி தருவதாக ஏற்கனவே கூறியிருக்கிறார்கள் என்று
தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி அலுவலர்கள் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்னன்குறிச்சியில் இடம் வாங்கி தருவதாக கூறியிருப்பதாக கூறியதை தொடர்ந்து,
முன்னாள் நகர்மன்றத் தலைவரை சந்திக்க பல முயற்சிகள் எடுத்தேன்.
அவரின் இளைய மகனுடன் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால் - அவர்கள் என்னை சந்திப்பதை தவிர்த்தார்கள். என்னை
சந்திக்கா விட்டாலும் பரவாயில்லை, அந்த இடம் குறித்து முடிவு கேட்டேன்.
முன்னாள் நகர்மன்றத் தலைவருடன் முந்தைய நிர்வாகத்தில் பணியாற்றிய இரு உறுப்பினர்களையும், தற்போதைய நிர்வாகத்தில் உள்ள ஒரு
உறுப்பினரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் பொன்னன்குறிச்சிக்கு செல்வதாக சொல்லப்பட்டது. விரைவில் நல்ல முடிவு சொல்வதாக தகவல்
வந்தது. ஆனால் - இறுதி வரை, அந்த இடத்தினை நகராட்சிக்கு வாங்கி தரவில்லை.
சென்னையில் இருந்து கடுமையான நெருக்கடி. நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப ஒப்புதல், ஒப்பந்தப்புள்ளிகள் கோரல் என அடுத்தடுத்து பல பணிகள்
நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் - இந்த திட்டத்திற்கான இடம் நகராட்சியிடம் இல்லை.
இந்த தருணத்தில் - மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஸ் குமார் IAS அவர்களை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்து கூறினேன். பொன்னன்குறிச்சி,
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் வருவதால் - அந்த பகுதியில் அரசு நிலங்கள் ஏதேனும் உள்ளதா என விசாரித்து கூறுவதாக தெரிவித்தார்கள்.
இரு வாரங்களில் - இறைவனின் மாபெரும் கிருபையால் - பொன்னன்குறிச்சியில், 50 சென்ட் அரசு நிலம், இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு
அடையாளம் காணப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது பணிகளும் நடைபெற்று வருகிறது.
நிலத்தை ஆக்கிரமித்தவர் செய்த பிரச்சனை
இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு - பொன்னன்குறிச்சியில் அரசு இடம் கிடைத்தப்பின் அங்கு பணிகள் துவங்கயிருந்தது. அரசு நிலத்தை
ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்ததால் மாவட்ட ஆட்சியர் அவர்கள், எளிமையான முறையில் பணிகளை துவக்க
சொன்னார். பின்னர் ஒரு நாளில், நகரில் - துவக்க நிகழ்ச்சியை முறையாக நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் - அந்த
நிகழ்ச்சி குறித்து, உறுப்பினர்களுக்கு மட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
விவரம் அறியாத சிலர், பெரியவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை என இதனையும் விமர்சனம் செய்தார்கள். நிகழ்ச்சி இடத்திற்கு ஊரில் இருந்தும்
ஐக்கிய பேரவையை சார்ந்தவர்களும், முன்னாள் நகர்மன்றத் தலைவரும், இன்னும் சிலரும் வந்தார்கள்.
பணிகள் துவங்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் - அரசு நிலத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்த சிலர் பிரச்சனை செய்ய துவங்கினர். பதட்டமான சூழல்
நிலவியது. அங்கிருந்து தொலைபேசியில் - மாவட்ட ஆட்சியர் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது - நிகழ்ச்சியை தற்போது கைவிடவும்,
பின்னர் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்றும், அனைவரும் அந்த இடத்தில இருந்து சென்றுவிடும்படியும் அவர்கள் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, அங்கிருந்து அனைவரும் களைந்து சென்றார்கள். பொன்னன்குறிச்சி அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் தாசில்தாரை காண
அங்கிருந்து நான் சென்றேன். முன்னாள் நகர்மன்றத் தலைவரும், அவருடன் சிலரும் அங்கு வந்திருந்தார்கள்.
அந்த நிலம் குறித்து பிரச்சனை செய்பவர்களுக்கு பணம் கொடுத்தால் சரியாகிவிடும் என கூறினார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதுவே
வாடிக்கையாகிவிடும் என்று கூறினேன். மாவட்ட ஆட்சியர் தான் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன்.
ஒரு சில தினங்கள் கழித்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் - காவல் படையினை அந்த இடத்திற்கு அனுப்பி பணிகளை துவக்க உதவி
புரிந்தார்கள்.
நகராட்சியின் பங்கையையும் அரசே வழங்கிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி
காயல்பட்டினத்தின் கனவு திட்டமான இரண்டாம் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 30 கோடியாகும். மத்திய அரசின் UIDSSMT என்ற திட்டம்
மூலம் அமல் செய்யப்பட முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கான நிதியில் 80 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் என்றும், 10 சதவீதத்தை மாநில
அரசு வழங்கும் என்றும், எஞ்சிய 10 சதவீதத்தை நகராட்சி வழங்கும் என்றும் - நாங்கள் பதவிக்கு வரும்முன்னரே முடிவு
செய்யப்பட்டிருந்தது.
நகராட்சியின் பங்கான 3 கோடி ரூபாயில், 1.5 கோடி ரூபாய் - நகராட்சியின் பொது நிதியில் இருந்து செலவு செய்யப்படும் என்றும், மீதி 1.5 கோடி
ரூபாய்க்கு - அப்போதைய தலைவர் பொறுப்பெடுத்து, மக்களிடம் கலந்தாலோசனை செய்து வழங்குவார் என்றும் ஏப்ரல் 2010இல் நடந்த கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டது.
அவ்வாண்டு இறுதியில் - ஜலாலியாவில் நடந்த கூட்டத்தில், 1.5 கோடி ரூபாயில், 50 லட்சம் ரூபாயினை அப்போதைய நகர்மன்றத் தலைவர்
தருவார் என்றும், மீதி 1 கோடி ரூபாய் - பொது மக்களிடம் இருந்து, ஐக்கிய பேரவையின் ஒருங்கிணைப்பில், இணைப்பு ஒன்றுக்கு 5000 ரூபாய்
முன்பணம் என, 2000 இணைப்புகள் மூலம் - பொது மக்களிடம் திரட்டப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. நாங்கள் பதவி ஏற்கும் தினம்
வரையில் - 1.5 கோடி ரூபாய் திரட்டப்படவில்லை.
நாங்கள் பதவி ஏற்றப்பின் நடந்த முதல் கூட்டத்தில் கூட, நகராட்சியின் பங்கு 3 கோடி ரூபாயையும் நகராட்சியின் பொது நிதியில் இருந்து வழங்கவே,
அதிகாரிகளால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
3 கோடி ரூபாய் என்பது - காயல்பட்டினம் நகராட்சி போன்ற சிறு நகராட்சிகளுக்கு பெரிய பணம் ஆகும். ஏறத்தாழ ஓர் ஆண்டின் வருவாய்க்கு
சமமானது. இவ்வளவு பெரிய தொகையை நகராட்சி கொடுத்தால், பணிகளுக்கு பணம் இருக்காது என்பதால், அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின்
மூலம்,நகராட்சியின் பங்கையும் அரசே வழங்க ஏற்பாடு செய்ய சென்னையில் அதிகாரிகளை தொடர்ந்து கோரி வந்தேன்.
மே 21, 2012 அன்று CMA அவர்களிடம் எழுத்துப்பூர்வமாகவும் எனது கோரிக்கையை சமர்ப்பித்தேன்.
தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக, இறைவனின் கிருபையால், நகராட்சியின் பங்கான 3 கோடி ரூபாய்க்கும் - தமிழக அரசே பொறுப்பேற்றது,
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
எதிர்கொண்ட பிரச்சனைகள்
மார்ச் 10, 2013 அன்று இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பணிகள் துவங்கின. சுமார் 18 மாதங்களில் பணிகள் நிறைவேறி இருக்க வேண்டும். கால தாமதமானதற்கு சில காரணங்கள்
உண்டு.
பொன்னன்குறிச்சி பணி இடம் அருகில் - வனத்துறையின் சில அனுமதிகள் பெற வேண்டியதில் கால தாமதம் ஆகியது. அவற்றினை பெற
அதிகாரிகளும், நானும் - வனத்துறை அலுவலர்களிடம் பேசினோம். இது குறித்து - மாவட்ட வனத்துறை அலுவலரை (DFO) நேரடியாகவும்
சந்தித்தோம்.
பொன்னன் குறிச்சியில் இருந்து காயல்பட்டினம் வரை - 27 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை வழியாக பைப் பதிக்க வேண்டும். இதில் சில
பிரச்சனைகள் அவ்வப்போது எழுந்தது. இது குறித்து அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அப்பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள்.
இது தவிர - CONTRACTOR-ம் சில பிரச்சனைகளை சந்தித்தார். குறிப்பாக - சில பணிகளை SUB - CONTRACT முறையில் அவர்கள் வழங்கியிருந்தனர்.
அதில் ஏற்பட்ட பிரச்சனைகளும் - கால தாமதத்திற்கு காரணம். இவைகளை தவிர - சில உறுப்பினர்கள் மூலமும் பிரச்சனைகள் வந்தது.
------------------------------------------------
தற்போது நகரில் இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான பைப்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 6 மாதத்திற்கு முன்பே துவங்க இருந்தது.
இதற்காக CONTRACTOR - ஆந்திராவில் இருந்து 60 பணியாட்களை வரவழைத்திருந்தார். ஆனால் நகரில் சில வார்டுகளில் - அப்பணிகளை
மேற்கொள்ள உறுப்பினர்கள் தடங்கல் விதித்தனர்.
தடங்கல் விதித்தற்கான காரணம் - புனிதமானவை அல்ல! அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதற்கு இறைவன் சாட்சி. இந்த தடங்கல்களால் -
அப்பணியாட்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இப்பிரச்சனை எனது கவனத்திற்கு கால தாமதமாக தான் கொண்டு வரப்பட்டது. மீண்டும் இது போன்று பிரச்சனைகள் வந்தால், காவல் துறை
உதவியை நாடும்படி ஆணையரிடம் கூறினேன்.
மழைக்காலம் முடிந்ததும் - மீண்டும் பைப் பதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் - நிலத்தில் நீர் அதிகமாக ஊறியதால், பணிகளை
உடனடியாக துவக்க முடியவில்லை. இறைவன் கிருபையால் - தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
------------------------------------------------
இரண்டாம் குடிநீர் திட்டத்தை பொறுத்த வரை, பொன்னன்குறிச்சியில் இருந்து புதிய பைப்கள் குடிநீர் மூலம் நகருக்கு கொண்டு வரப்படவுள்ளது.
மேலும் - நகரில், புதிதாக பதியப்படவுள்ள பைப்கள் மூலமே ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு முட்டுக்கட்டை
போட சிலர் நாடுகின்றனர்.
நகரில் பல ஆண்டுகளாக திருட்டுத்தனமாக பல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகள் முதல் பலர் உறுதுணை புரிந்துள்ளனர்.
புதிய திட்டம் நிறைவேறுவது மூலம் - அந்த திருட்டு இணைப்புகள் தெரியவந்துவிடும் / வீணாகிவிடும் என்ற காரணத்தினால், புதிய பைப்கள்
போடாமல் தடுக்கவும் ஒரு சிலர் திட்டம் தீட்டி செயல் புரிகின்றனர்.
புதிய குடிநீர் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட, நகராட்சியில் - நீண்ட நாட்களாக பணிப்புரியும் அதிகாரிகள், இடமாற்றல் செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக நான் - உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறேன். தொடர்ந்தும் - இறைவன் நாடினால் -
வலியுறுத்துவேன்.
இந்த திட்டம் விரைவாக நிறைவேற அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். இது குறித்து சென்னை செல்லும்போது எல்லாம் -
அதிகாரிகளிடம், துரிதப்படுத்த கோரிக்கைகள் வைத்துள்ளேன். பணிகளின் தற்போதைய நிலையை, புகைப்படங்களுடன் அவர்களுக்கு தெரிவித்து
வருகிறேன்.
இந்த திட்டத்தை காலதாமதப்படுத்த, சீர்குலைக்க ஒரு சிலர் செய்து வரும் முயற்சியையும், தமிழக அரசின் மேல்மட்டம் முதல் சம்பந்தப்பட்ட
அனைவரின் கவனத்திற்கும் எழுத்துப்பூர்வமாக கொண்டு சென்றுள்ளேன்.
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த திட்டம் விரைவில் நிறைவேற - அனைவரின் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும்
மிகவும் அவசியம்.
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் பதிவு செய்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|