காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள், அடைகலபுரம் வழியாக செல்வதாக நீண்ட நாட்களாக புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், சமீபத்தில் - சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
அந்த புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து - நகர்மன்றத் தலைவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பல பேருந்துகள் காயல்பட்டினம் வராமல் - அடைக்கலபுரம் பாதையில் செல்வதாக பல நாட்களாக புகார்கள் இருந்து வருகிறது.
இது குறித்து - ஜனவரி மாதம், சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் பாலாஜி அவர்களிடம் புகார் மனு கொடுத்திருந்தேன்.
அதனை தொடர்ந்து - திருநெல்வேலி மண்டல பொது மேலாளர், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கிளை மேலாளர்கள் ஆகியோரிடமும் மனு கொடுத்திருந்தேன். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) அவர்களிடமும் மனு கொடுத்தேன்.
திருச்செந்தூர் கிளை மேலாளர் திரு பாஸ்கர் அவர்கள், திருச்செந்தூர் கிளை பேருந்துகளில் - அடைகலபுரம் பெர்மிட் பெற்றுள்ள இரண்டு மதுரை மற்றும் இரண்டு வேளாங்கணி பேருந்துகள் தவிர, அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக தான் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் - அவ்வாறு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
இது தவிர - திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட,
சங்கரன்கோவில் (1 சேவை),
தூத்துக்குடி (1 சேவை),
விளாத்திக்குளம் (1 சேவை),
ஸ்ரீவில்லிப்புத்தூர் (2 சேவைகள்),
சிவகாசி (1 சேவை),
கோயம்புத்தூர் (2 சேவைகள்),
திருப்பூர் (3 சேவைகள்),
திண்டுக்கல் (3 சேவைகள்),
குமுளி (2 சேவைகள்),
பெரியகுளம் (1 சேவை) -
ஆகிய வழித்தட பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழியாக செல்ல துவங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து நிலைமையை - திடீர் ஆய்வுகள் மூலமாக கண்காணிக்கவும், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள்.
நடவடிக்கை எடுத்த மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும், அனைத்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் - பொது மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
திருநெல்வேலி மண்டலம் சாராத - காயல்பட்டினம் பெர்மிட் பெற்ற - கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மண்டல பேருந்துகளும் - காயல்பட்டினம் வழியாக செல்ல - இறைவன் நாடினால் - தொடர்ந்து முயற்சி எடுப்பேன்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
|