காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் நடத்தப்பட்ட மீலாத் விழாவில், போட்டிகள் பல நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியருகில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இதன் சார்பில் ஆண்டுதோறும் மீலாத் விழாக்கள் நடத்தப்பட்டு, சன்மார்க்கப் போட்டிகள் நடத்தி - பரிசுகளும் வழங்கப்படுவது வழமை.
நடப்பாண்டு மீலாத் விழா மற்றும் அமைப்பின் 31ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள், ஹிஜ்ரீ 1436 - ரபீஉல் ஆகிர் 18ஆம் நாள், 08.02.2015 சனிக்கிழமை காலை முதல் இரவு வரை குத்துக்கல் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்றன.
அன்று 07.00 மணியளவில் சிறுவர்கள் நால்வர் பைத் பாடி நகர்வலமாக அழைத்து வரப்பட்டு, கத்னா - சுன்னத் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை அமர்வு:
08.00 மணிக்கு, நபிகள் நாயகம் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் - பிரபு முஹம்மத் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.
09.30 மணிக்கு, திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள - நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6 ஹாஃபிழ்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
மாலை அமர்வு:
16.30 மணிக்கு, “நவீனப் பிரச்சினைகளுக்கு நபிகளார் காட்டும் பாதை” எனும் தலைப்பில் இளம் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் 15 மாணவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இரவு அமர்வு:
19.00 மணியளவில், ஹாஃபிழ் எஸ்.எச்.முத்துவாப்பா கிராஅத் ஓதி, இரவு அமர்வைத் துவக்கி வைத்தார். ஹாஜி கே.டீ.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி வி.எம்.எஸ்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகிக்க, தோல்ஷாப் எம்.எல்.செய்யித் உமர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய - மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ தலைமையுரையாற்றினார். தொடர்ந்து, மவ்லவீ பிரபு செய்யித் முஹ்யித்தீன் ஜலாலீ ஸூஃபீ விழா அறிமுகவுரையாற்றினார்.
மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ - இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, “தூய நபியின் தொலைநோக்குப் பார்வை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பரிசளிப்பு:
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிஃப்ழுப் போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ரூபாய் 1500, 1250, 1000 பணப்பரிசுகளும், பேச்சுப்போட்டியில் சிறப்பிடங்களைப் பெற்ற முதல் மூவருக்கு முறையே ருபாய் 1000, 750, 500 பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை, குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் மற்றும் மேடையில் அங்கம் வகித்தோர் மாணவர்களுக்கு வழங்கினர்.
இக்ராஃ மூலம் உயர்கல்வி உதவித்தொகை:
மீலாத் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில், மாணவர்கள் நலனுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் அறிமுகப்படுத்தி, பல்லாண்டுகளாகச் செய்து வருகிறது. வழமை போல நடப்பாண்டும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் என்ற விகிதத்தில் 3 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் என இரண்டு மாணவர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் அதனைப் பெற்றுக்கொண்டார்.
முஹ்யித்தீன் பள்ளி இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் நன்றி கூற, ஃபாத்திஹா - துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, தோல்ஷாப் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், தோல்ஷாப் எம்.எல்.ஷம்சுத்தீன், எம்.எஸ்.அபூபக்கர், எஸ்.என்.ஆஷிக் ரஹ்மான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
பாலப்பா M.S.K.முஹம்மத் இப்றாஹீம்
ஆசிரியர் Z.A.ஷேக் அப்துல் காதிர்
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தால் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட மீலாத் விழா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |