காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டி இம்மாதம் 06ஆம் நாள் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று (மே 11) நடைபெறவிருந்த போட்டி, மழை காரணமாக இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் காலை முழுக்க மழை பெய்த காரணத்தால், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி, விளையாட இயலாத அளவில் உள்ளது.
இதனையடுத்து, மாவட்ட கால்பந்துக் கழக நிர்வாகிகள், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்றுப்போட்டிக் குழுவினர், வேறு இடங்களில் போட்டியை நடத்த இடங்களைப் பரிசீலித்தனர்.
கடந்தாண்டு சுற்றுப்போட்டியின் துவக்க நாளன்று இதேபோன்று மழை பெய்த வேளையில், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மறுநாளன்று போட்டி இடமாற்றி நடத்தப்பட்டது. அதுபோல தற்போதும் செய்ய நாடி அம்மைதானத்தைப் பார்வையிட்டபோது அங்கும் மழை நீர் தேங்கியிருந்ததால், அங்கும் போட்டியை நடத்த இயலாத நிலையுள்ளது..
இதனையடுத்து, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் சுற்றுப்போட்டிக்குத் தேவையான சில ஏற்பாடுகளைச் செய்து, மைதானம் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு போட்டி நடத்தப்படவுள்ளது.
இன்று 16.30 மணிக்கு வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் கால்பந்துப் போட்டி நடைபெறுமெனவும், இப்போட்டியில் திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும், சென்னை எம்.யு.சி. அணியும் மோதவுள்ளதாகவும், சுற்றுப்போட்டிக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில்...
A.S.புகாரீ
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |