காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா
மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தொடர்ந்துள்ள
இவ்வழக்கு ஏப்ரல் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு
வந்தது.
வழக்கினை அனுமதித்து எதிர்தரப்புகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர், வழக்கினை -
கோடைக்கால விடுமுறையில் கூடும் சிறப்பு நீதிமன்ற அமர்வில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.
சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மற்றும் மாவட்ட ஆட்சியர் (மாவட்ட கடலோரம் மேலாண்மை அமைப்பு
தலைவர்), தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சுற்றுச்சூழல் பொறியாளர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகர்மன்ற
ஆணையர் மற்றும் இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ள SK & Co. நிறுவனம் ஆகியோர் இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் ஆவர்.
நீதிபதிகள் பீ.என.பிரகாஷ் மற்றும் புஸ்பா சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் - உயர்நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு மே 6 அன்று முதல்
முறையாக கூடியது. அப்போது சர்வே எண் 278 வழக்கு (வழக்கு எண் WP [MD] 7730/2015), 59வது வழக்காக விசாரணைக்கு வந்தது.
எதிர்மனுதாரர்கள் அனைவரின் தரப்பிலும் நோடீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வழக்கினை - விடுமுறை நீதிமன்றத்தின் மே 13
அமர்வுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மே 13 இன்று - இவ்வழக்கு விடுமுறைக்கால நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் - 64வது
வழக்காக வந்தது. இன்றைய விசாரணையின் போது - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஆணையர் காந்திராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
நகராட்சி சார்பாக தவிர்த்து எழுத்துப்பூர்வமாக எதிர் தரப்பினர் எவரும் தங்கள் வாதங்களை சமர்ப்பிக்காத நிலையில், வாய் மொழியிலான வாதங்கள் நடைபெற்றன.
அப்போது - வழக்கில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் பிரதானமாக சுற்றுச்சூழல் விதிமுறைகள் சம்பந்தமாக இருப்பதால், உயர்நீதிமன்றம் மூலம் விசாரணையை தொடர்வதா அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழக்கினை மாற்றுவதா என முடிவு செய்ய, எதிர் மனுதாரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாட்டை - தனித்தனியாக தாக்கல் செய்ய - கால அவகாசம் வழங்கி, இவ்வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.
அப்போது மனுதாரர்கள் சார்பாக பேசிய வழக்கறிஞர் எம்.பி.செந்தில், உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கினை வாபஸ் பெற்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கினை தொடர - நீதிபதிகளிடம் உடனடி அனுமதி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அது குறித்த தீர்ப்பினை வழங்கினர்.
மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் டி.அருள் மற்றும் எம்.பி.செந்தில் ஆகியோர் ஆஜராகினர்.
அரசு துறை தரப்புகள் சார்பாக அரசு வழக்கறிஞர்கள் கே.செல்லப்பாண்டியன், பாஸ்கர பாண்டியன், மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக வழக்கறிஞர்
சி.இளமான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அஸோசியேட்ஸ், நகர்மன்ற ஆணையர் சார்பாக அரசு வழக்கறிஞர்
எம்.ராஜராஜன், ஒப்பந்ததாரர் சார்பாக எஸ்.முத்து கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:30 pm / 13.5.2015]
|