திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., உயர்நிலை செயல்தி்ட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கருப்புசாமி பாண்டியன், ஆகியோர் தி.மு.க.,வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
காரணம் என்ன?
திருச்செந்தூர் தொகுதி திமுக - எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர், அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல் பரவி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்ட திமுக செயலர் பெரியசாமிக்கும், அனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால், அனிதாவால், கட்சியில் முழுமையாக செயல்பட முடியவில்லை. இதனால், திமுக சார்பில் நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும், அனிதா பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த விரக்தியில், மீண்டும் அதிமுக பக்கம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும், அதற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார், அனிதா. மேலும், எம்.எல்.ஏ. பதவியை, ஜெயலலிதா ராஜினாமா செய்ய சொன்னால், அதை செய்வேன் எனவும், கூறினார். அதேபோல், முன்னாள் திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியனும், அதிமுகவில் சேரப் போவதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை ஆனதில் மகிழ்ச்சி. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட அம்மா விரும்பினால் ராஜினாமா செய்ய தயார் என அத்தொகுதியின் எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இது திமுக மேலிடத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
www.tutyonline.com |