இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நகரின் அனைத்து வார்டுகளுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு நிர்வாகிகள் வார்டு வாரியாக அறிமுகம் செய்யப்பட்டதுடன், அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், கட்சியினரும், அந்தந்தப் பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு 12.04.2015 அன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்குழுக் கூட்டத்தின்போது, நகர நிர்வாகிகளும், நகரின் அனைத்து வார்டுகளுக்கும் வார்டு நிர்வாகிகளும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு நிர்வாகிகளை, அந்தந்த வார்டுகளில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சியின் பிறைக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள், இம்மாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 16.30 மணியளவில் துவங்கியது.
கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் - அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் பள்ளப்பட்டி முஹம்மத் யூனுஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கட்சியின் தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதன் செயலாளர் குளச்சல் ஷாஹுல் ஹமீத், பொருளாளர் குலசேகரம் ஷாஜஹான், குளச்சல் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் நஸீம் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகம் அமைந்துள்ள சதுக்கைத் தெரு தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலிலிருந்து நகர்வலம் துவங்கியது.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த பக்கீர் குழுமத்தினரின் பாரம்பரிய தஃப்ஸ் முழங்க, “நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்!! முஸ்லிம் லீக்! ஜிந்தாபாத்!!” என்ற முழக்கங்களுடன் அனைவரும் வாகனங்களில் அணிவகுத்துச் செல்ல, துவக்கமாக சதுக்கைத் தெரு பெரிய சதுக்கையில் கொடியேற்றப்பட்டது. அதனையடுத்து,
03ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, குத்பா பெரிய பள்ளி சந்திப்பிலும்,
01ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, கோமான் நடுத்தெரு சந்திப்பிலும்,
02ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் அருகிலும்,
18ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம் பகுதியிலும்,
17ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, குத்துக்கல் தெருவில் முஹ்யித்தீன் பள்ளிக்கு எதிரிலும்,
04ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, குறுக்கத் தெருவில், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிக்கு எதிரிலும்,
06ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, சிறிய குத்பா பள்ளி எதிரிலும்,
07ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, தீவுத்தெருவிலும்,
08ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, சொளுக்கார் தெரு - ஸீ.கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில், இளைஞர் ஐக்கிய முன்னணி எதிரிலும்,
09ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, அப்பாபள்ளித் தெரு - ஸீ.கஸ்டம்ஸ் சாலை சந்திப்பிலும்,
05ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி எதிரிலும்,
10ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டீ.மருத்துவமனை எதிரிலும்,
13, 14ஆவது வார்டுகளின் கொடியேற்ற நிகழ்ச்சி, பேருந்து நிலையம் முன்பும்,
15ஆவது வார்டு கொடியேற்ற நிகழ்ச்சி, பைபாஸ் சாலையிலும்,
16ஆவது வார்டுகளின் கொடியேற்ற நிகழ்ச்சி, தைக்கா தெரு - ஐசிஐசிஐ வங்கி முனையிலும்,
11, 12ஆவது வார்டுகளின் கொடியேற்ற நிகழ்ச்சி, வள்ளல் சீதக்காதி திடலிலும் நடைபெற்றது.
இவ்வனைத்து வார்டுகளிலும், அவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு, சிறப்பு விருந்தினரான - கட்சியின் இளைஞரணி மாநில அமைப்பாளர் பள்ளப்பட்டி முஹம்மத் யூனுஸ் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
தலைமை தாங்கிய மாநில பொதுச் செயலாளர், சிறப்பு விருந்தினரான மாநில இளைஞரணி அமைப்பாளர், முன்னிலை வகித்த கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர், ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் மற்றும் நகரின் மூத்த நிர்வாகிகள் அனைத்து வார்டுகளிலும் தாய்ச்சபையின் பிறைக்கொடியை ஏற்றி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர் பள்ளப்பட்டி முஹம்மத் யூனுஸ் நிறைவுரையாற்ற, துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
சென்ற இடங்களிலெல்லாம் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து நிகழ்விடத்தில் திரண்டிருந்து, கட்சியினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தலைமையில், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |