காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 16 சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் சிட்டி காலேஜ் அணியும், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும் மோதின.
இரு அணிகளின் ஆட்டமும் துவக்கம் முதற்கொண்டு மிகவும் நேர்த்தியாகவும், மூர்க்கத்துடன் விறுவிறுப்பாகவும் இருந்தது. வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் ஈரணிகளும் பல வடிவங்களில் மோதி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.
முதற்பாதியில் ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், ஈரணிகளும் சம பலத்துடன் ஆடியபோதிலும், பந்தைக் கடத்திச் செல்வதில் ஹைதராபாத் அணியிடம் மிகவும் நேர்த்தி காணப்பட்டது.
அவ்வணியின் ஸஃப்தார் 57ஆவது நிமிடத்திலும், ஈஸா 73ஆவது நிமிடத்திலும், வஸீம் 93ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், எதிரணியினர் கோல் எதுவும் அடிக்காததால், நிறைவில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
நாளை (மே 17 ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மூன்றாவது காலிறுதிப் போட்டியில், இவ்வணி - நேற்று விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் KSC அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இப்போட்டியில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது, அவருக்கு ஈரணியினரும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மே 17 ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும், ஹைதராபாத் சிட்டி காலேஜ் அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |