காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 15 வெள்ளிக்கிழமை (இன்று) நண்பகலில் மழை பெய்ததால், மைதானத்தில் மழை நீர் தேங்கி, போட்டி நடத்த இயலாத நிலை ஏற்படவே, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி திறந்தவெளி திடலில் (இரண்டாவது முறையாக) இன்றைய போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும், மஹாராஷ்ட்டிர மாநிலம் புனே நகரின் சரத் சாக்கர் அணியும் மோதின.
துவக்கம் முதல் காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதற்பாதியில், 25, 27 மற்றும் 38ஆவது நிமிடங்களில், அவ்வணியின் வீரர் ஸமீர் தொடர்ந்து 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இரண்டாவது பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நிறைவில், 3-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. அணி வெற்றிபெற்று, இம்மாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள 3ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
16.05.2015 சனிக்கிழமை நடைபெறும் போட்டியில், ஹைதராபாத் சிட்டி காலேஜ் அணியும், கோழிக்கோடு யுனிவர்ஸல் கால்பந்துக் கழக அணியும் மோதுகின்றன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
கூடுதல் படங்கள்:
A.S.அஷ்ரஃப்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற ஒன்பதாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[படங்கள் இணைக்கப்பட்டன @ 16:06 / 16.05.2015] |