காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 14 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும், சென்னை எம்.எஸ்.யு. அணியும் மோதின.
துவக்கப் போட்டிகளில் நன்றாக ஆடிய திருவனந்தபுரம் அணியினர் இப்போட்டியில் சென்னை அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே திணறினர்.
சென்னை அணியின் லால்டன் மணியா 33, 74ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார். டவும்பியா மாமாடூ 41ஆவது நிமிடத்திலும், ஜான் மாஜு 74ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
திருவனந்தபுரம் அணிக்காக, அதன் வீரர் ராஜேஷ் 87ஆவது நிமிடத்தில் ஒரேயொரு கோல் அடித்து, அணியை ஆறுதல்படுத்தினார். நிறைவில், 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத திருவனந்தபுரம் அணி, அவ்வப்போது இயல்பாக நிகழும் ஃபவுல்களுக்கெல்லாம் கோபமுறத் துவங்கினர். அக்கோபம் உச்சகட்டத்திற்குச் சென்று, உற்சாகமாக ஓடி விளையாடிய சென்னை வீரரின் கையைப் பிடித்து இழுக்கும் அளவுக்கும், கை ஓங்கி அடிக்கும் அளவுக்கும் செல்லவே, திருவனந்தபுரத்தின் இரண்டு வீரர்களை - சிவப்பு அட்டை காண்பித்து நடுவர் வழி(வெளி)யனுப்பி வைத்தார்.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். நடப்பாண்டு இதுவரை நடைபெற்ற போட்டிகளை ஒப்பிடுகளையில், நடப்பு போட்டியில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மே 15 வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும், மஹாராஷ்ட்டிர மாநிலம் புனே நகரின் சரத் சாக்கர் அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற எட்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |